

மனசாட்சிப்படி நடந்தால், நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து இறங்குவார். மக்கள் மாற்றத்துக்காகவே தீர்ப்பளித்தார்கள். ஆனால், சூழ்ச்சியால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
பிஹாரில் 243 சட்டப்பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில் 125 இடங்களை நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு, பாஜக கூட்டணி வென்றது. 110 இடங்களில் காங்கிரஸ், ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணி கைப்பற்றியது. இருப்பினும், மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் பாட்னாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மகா கூட்டணியின் சட்டப்பேரவைத் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் நிருபர்களுக்கு தேஜஸ்வி யாதவ் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்தத் தேர்தலில் நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 3-வது இடத்தைத்தான் பிடித்துள்ளது. ஆனாலும், நிதிஷ் குமார் மனசாட்சிப்படி நடப்பவராக இருந்தால், அவர் முதல்வர்பதவியில் இருந்து இறங்கியிருப்பார். மக்களின் தீர்ப்பை மதித்து நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போகிறேன் என்று வாக்குகளைக் கவர மக்களிடம் நிதிஷ் குமார் பேசினார். அவர் அரசியல் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கும்போது அவமரியாதைக் குறைவான செயல்களில் எல்லாம் ஈடுபடக்கூடாது.
(கடந்த 2017-ம் ஆண்டில் மகா கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் தேஜஸ்வி யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது. அப்போது கருத்துத் தெரிவித்த நிதிஷ்குமார், “மனசாட்சிப்படி நடந்தால் தேஜஸ்வி துணை முதல்வர் பதவியில் நீடிக்கமாட்டார்” எனத் தெரிவித்தார். இதை இப்போது நிதிஷ் குமாருக்கு திருப்பிக் கொடுத்தார் தேஜஸ்வி.)
பிஹாரில் மக்கள் மாற்றத்தை விரும்பித்தான் வாக்களித்தனர். ஆனால், அந்த முடிவு செயற்கையாகத் திருத்தப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பணம், அதிகார பலம், சூழ்ச்சி ஆகியவற்றால் வென்றுவிட்டது.
நாங்கள் எங்களுக்குத் தீர்ப்பளித்த மக்களிடம் செல்வோம். அவர்கள் நாங்கள்தான் வரவேண்டும் என்று விரும்பினால் நாங்கள் வருவோம். எங்கள் கட்சியைவிட, அதாவது மகா கூட்டணியைவிட, தேசிய ஜனநாயகக் கூட்டணி 12,270 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது.
எவ்வாறு எங்களைவிட 15 இடங்கள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற முடியும். வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடந்திருந்தால் நாங்கள் 130 இடங்கள் வரை கைப்பற்றுவோம் என நம்பினோம்.
எங்கள் கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதி குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவோம். பல தொகுதிகளில் தபால் வாக்குகள் கடைசிக் கட்டத்தில்தான் எண்ணப்பட்டன. தொடக்கத்திலேயே தபால் வாக்குகள் எண்ணப்படுவதுதான் வழக்கம். இதில் 900 தபால் வாக்குகள் செல்லாதவையாக இருந்தன. அவையும் கணக்கில் கொள்ளப்பட்டன.
ஒரு பதவி, ஒரு ஓய்வூதியத் திட்டத்துக்கு நாங்கள் அளித்த ஆதரவால், எங்களுக்கு ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் ஆதரவு பெரிதாக ஏற்பட்டதால் இதைச் சந்தேகிக்கிறோம். நாங்கள் சந்தேகப்படும் சில தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி அதை வீடியோ மூலம் பதிவிட வேண்டும்.
தேர்தல் அதிகாரிகள் பாஜகவின் சிறையில் அடைப்பட்டது போன்று செயல்பட்டார்கள். எங்களின் குறைபாடுகளைத் தேர்தல் ஆணையம் களையாவிட்டால் சட்டரீதியான தீர்வுகளை நோக்கி நகர்வோம்''.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.