தண்ணீர் பாதுகாப்பே நமது வாழ்க்கையின் வழிமுறை: வெங்கய்ய நாயுடு

தண்ணீர் பாதுகாப்பே நமது வாழ்க்கையின் வழிமுறை: வெங்கய்ய நாயுடு
Updated on
1 min read

தண்ணீர் பாதுகாப்பையே நமது வாழ்க்கையின் வழிமுறையாக மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2019-ம் ஆண்டுக்கான தேசிய தண்ணீர் விருது வழங்கும் விழாவை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு காணொலிக் காட்சி வழியே தொடங்கி வைத்தார். மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, இத்துறையின் உயர்அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விழாவில் உரையாற்றிய வெங்கய்ய நாயுடு, நீர்வள அமைச்சகம், அனைத்து மாநிலங்கள், அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் தண்ணீர் பாதுகாப்புக்காகப் பணியாற்றியவர்களின் பங்களிப்புகளைப் பாராட்டினார்.

தேசிய தண்ணீர் விருது வாயிலாக பொது இயக்கமானது, பொதுமக்களின் இயக்கமாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

“பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒன்றும் சாத்தியமில்லை. இதனை நாம் தூய்மை இந்தியா இயக்கத்தில் கண்கூடாகப் பார்த்தோம்,” என்று தெரிவித்தார்.

தூய்மை இந்தியா இயக்கம், ஜல் சக்தி அபியான் போன்ற பல முன் முயற்சிகளை எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வெங்கய்ய நாயுடு பாராட்டுத் தெரிவித்தார்.

அனைத்துப் பங்கெடுப்பாளர்களும் பல்வேறு பிரிவுகளில் விருது பெற்றதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த குறைந்த வளத்தைக் கொண்டு தண்ணீர் பாதுகாப்புக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வெகுஜன ஊடகங்கள் வாயிலான நீடித்த பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தண்ணீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தண்ணீர் பாதுகாப்பையே நமது வாழ்க்கையின் வழிமுறையாகப் பின்பற்றும் வகையில் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதற்கான தேவை எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சிக் கொள்கையின் முன்னணியில் நல்ல ஆளுகை வைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

கங்கை பாதுகாப்புத்திட்டத்தின் பலன்கள், பிரதம மந்திரி கிருஷிசிஞ்சை யோஜனாவின் கீழ் நீர் பாசனத்திட்டங்களை விரைவாக முடித்தல், அடல் பூஜல் யோஜனா வாயிலாக நிலத்தடி நீர் மேலாண்மைக்கு புதுப்பிக்கப்பட்ட பங்கேற்பு அணுகுமுறை, தேசிய நீர்நிலைத் திட்டத்தின் வாயிலாக நீரியல் தரவு கிடைப்பதில் முன்னேற்றம், நீர்வாழ் மேலாண்மை குறித்த தேசிய திட்டம் போன்றவை கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் தண்ணீர் துறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவின் நீர்வளங்களை ஒருங்கிணைந்த முறையில் நிர்வகிக்க நீர்வள அமைச்சகத்தை உருவாக்கியதன் வாயிலாக மிகத் தேவையான கொள்கை சீர்த்திருத்தம் மிக உயர்ந்த மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், தண்ணீர் தேவை, விநியோகம் என இரண்டு தரப்பிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in