தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை கொடுங்கள்; பிஹாரில் ஊழலை ஒழித்து காட்டுகிறேன்: நிதிஷ்குமார் மீது குற்றம்சாட்டி பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி

தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை கொடுங்கள்; பிஹாரில் ஊழலை ஒழித்து காட்டுகிறேன்: நிதிஷ்குமார் மீது குற்றம்சாட்டி பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி
Updated on
2 min read

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்தது போல, இந்த முறை பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்யுங்கள். பிஹார் மாநிலத்தில் ஊழலை ஒழித்துக் காட்டுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.

பிஹார் சட்டப்பேரவைக்கு 5 கட்ட தேர்தல் நடக்கிறது. இதுவரை 3 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. 4-வது கட்டமாக 55 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் ஆகியவை மெகா கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன பாஜக - ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்தளம் கட்சி - முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி ஆகியோருடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.

இருதரப்பினரும் நான்காவது கட்ட தேர்தல் நடைபெறும் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் பாஜக சார்பில் நேற்று நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

லாலு ஆட்சியின்போது இந்த கோபால்கஞ்ச் பகுதியில் தினமும் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். ஆட்கள் கடத்தப்பட்டனர். கொள் ளைகள் நடந்தன. தலித்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். ரயில் நிலையங்களில் தினமும் துப்பாக்கிச் சூடு நடந்தது. காட்டு தர்பார் நடந்தது. அந்த பழைய காலம் திரும்ப வரவேண்டும் என்று நிதிஷ்குமார் விரும்புகிறாரா?

நிதிஷ் விரும்பட்டும். ஆனால், பிஹார் மக்கள் விரும்பவில்லை. இந்த தேர்தலில் ஐஜத கூட்டணி வெற்றி பெற்றால், கோபால்கஞ்ச் பகுதி மினி சம்பல் பகுதியாக மாறி விடும். (ம.பி.யில் சம்பல் பள்ளத்தாக்கில் பூலான்தேவி உட்பட கொள்ளையர்கள் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.)

எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப் பட்டோரின் இடஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை பறித்து வேறு இனத்தவருக்கு வழங்க நிதிஷ்குமாரும் லாலுவும் திட்டமிட்டுள்ளனர் என்று சில நாட்களுக்கு முன்னர் கூறினேன். அதை அவர்கள் மறுத்து மக்களை திசை திருப்புகின்றனர். ஆனால், கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிதிஷ்குமார் என்ன பேசினார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. படாபாய் லாலு ஆட்சியிலும் சோட்டாபாய் நிதிஷ் ஆட்சியிலும் பிஹாரில் எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

பிஹாரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டத்தின் ஆட்சி நடக்கும். காட்டு தர்பாருக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படும். ஊழலை ஒழித்துக் காட்டுவேன். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை நம்பி வாக்களித்தீர்கள். அதேபோல இந்த சட்டப்பேரவை தேர்தலிலும் நம்பி வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மாநிலத்தில் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்கி தருகிறோம். ஊழல் இல்லாத மாநிலமாக பிஹாரை மாற்றிக் காட்டுகிறோம். வேலை இல்லாமல் இடம்பெயர்ந்த இளைஞர்களில் இந்த கோபால்கஞ்ச் மற்றும் சிவான் பகுதியை சேர்ந்தவர்கள்தான் அதிகம். எனவே, பாஜகவை வெற்றி பெறச் செய்யுங்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி, நிலக்கரி ஊழல்கள் நடந்தன. ஆனால், கடந்த 16 மாத பாஜக ஆட்சியில் ஒரு பைசாவுக்குகூட ஊழல் நடக்கவில்லை. அதுபோல பிஹாரை மாற்றிக் காட்டுவோம்.

ஊழலில் சிக்கி சிறைக்கு சென்ற லாலு, உடனடியாக தனது மனைவியை முதல்வராக்கி விட்டார். இப்போது மீண்டும் சிறையில் தள்ளும் காலம் வரும் என்பதை உணர்ந்து தனது மகன்களை தயார்படுத்தி வருகிறார். இதுபோன்றவர்களிடம் பிஹாரை ஒப்படைக்க போகிறீர்களா? ஊழல் செய்பவர்களை கண்டுபிடித்தால், அவர்களுடைய வீட்டை பறிமுதல் செய்து பள்ளிகளாக மாற்றுவேன் என்று நிதிஷ் குமார் கூறினார். இப்போது லாலு செய்த ஊழல்களுக்காக அவருடைய வீட்டை பறிமுதல் செய்து பள்ளியாக மாற்றிக் காட்டுவாரா? வெறும் வாய் வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றுகிறார் நிதிஷ். எனவே, இந்த தேர்தலில் நன்கு சிந்தித்து பாஜகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வெளியூர் என்றால், சோனியா யார்?’

நான் என்னை வெளியூர்க்காரன் என்று நிதிஷ்குமார் கூறுகிறார். அப்படி என்றால், சோனியா காந்தி யார்? நான் என்ன பாகிஸ்தான் பிரதமரா? வங்கதேச நாட்டை சேர்ந்தவனா? அல்லது இலங்கை பிரதமரா? இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் பிஹார் மக்களும் வாக்களித்துதான் என்னை பிரதமராக தேர்ந்தெடுத்து இருக்கின்றனர்.

டெல்லியில் வசிக்கும் மேடம் சோனியாவையும் நிதிஷ்குமார் வெளியூர்க்காரர் என்று கூறுவாரா? ஆக்கப்பணிகளில் தோல்வி அடைந்தவர்கள்தான் இதுபோல வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு மக்களை திசை திருப்புவார்கள். இவ்வாறு மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in