

பிஹார் சட்டப்பேரவைத் தேர் தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆளும் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 116, ஆர்ஜேடி கூட்டணி 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 69-91, ஆர்ஜேடி கூட்டணி 139-161 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது.
ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 91-117, ஆர்ஜேடி கூட்டணிக்கு 118-138 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. தேர்தல் கருத்துக் கணிப்புகளில் முன்னோடியான டுடேஸ் சாணக்கியா, பாஜக கூட்டணிக்கு 44-56 இடங்களும் ஆர்ஜேடி கூட்டணிக்கு 169-191 இடங்களும் கிடைக்கும் என்று கணித்திருந்தது. ஆனால் இந்த கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி பாஜக கூட்டணி 125 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
ஏபிபி நியூஸ் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 104-128தொகுதிகளும் ஆர்ஜேடி கூட்டணிக்கு 120 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த கருத்துக் கணிப்பு தேர்தல் முடிவுகளுடன் ஒத்துப் போகிறது.
இதுகுறித்து அலசி ஆராய்ந்துள்ள கருத்துக் கணிப்பு நிபுணர்கள், 3 முக்கிய காரணங்களை சுட்டிக் காட்டியுள்ளனர்.
பிஹார் சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணி வேகம் பெற்றது. கருத்துக் கணிப்புகளை நடத்தியஊடகங்கள் இதை கவனிக்க தவறிவிட்டன. வாக்குப்பதிவின் இறுதி நேரத்தில் பெண்கள் பெருந்திரளாக வந்து வாக்களித்தனர். பெரும்பாலான ஊடகங்கள் அவர்களின் கருத்துகளைக்கேட்டறியவில்லை.
மேலும் தங்கள் கருத்துகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத வாக்காளர்கள், பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த 3 காரணங்களால் கருத்துக் கணிப்பு முடிவுகள் எதிரும் புதிருமாக அமைந்துவிட்டன என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் விமர்சகர் நீலஞ்சன்சிர்கார் கூறும்போது, "பாஜகவும்,ஆர்ஜேடியும் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என்பதைஊடகங்கள் சரியாக கணித்துள்ளன. ஆனால் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும், ஆர்ஜேடியுன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் பின்னடைவை சந்தித்துள்ளன. மேலும் கரோனா வைரஸ்அச்சுறுத்தல் காரணமாக கருத்துக் கணிப்புகளை முறையாக நடத்த முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால் கருத்துக் கணிப்புகள் தடம் புரண்டுள்ளன" என்றார்.