

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் தடை செய்து மத்திய அரசு புதன்கிழமை (மே 14) உத்தரவிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1991-ம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
“இலங்கையில் நடைபெற்ற போரில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், தனி ஈழம் என்ற விவகாரம் தொடர்ந்து நீடிக்கவே செய்கிறது. தனி ஈழத்துக்கான பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மிச்சமுள்ள உறுப் பினர்கள் சிதறிப்போன தங்கள் அமைப்பின் அங்கத்தினர்களை மீண்டும் ஒன்று சேர்க்கும் வகையில் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ் பிரிவினைவாத குழுக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பிரிவினைவாத சிந்தனையை தூண்டுவதிலும், விடுதலைப் புலிகள் ஆதரவு தளத்தை வலுவடையச் செய் வதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட போதிலும் கூட அந்த அமைப்புக்கான ஆதரவை வளர்ப்பதற்கான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன. ஆகவே, அந்த அமைப்பின் செயல்பாடுகள் ஒடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது.
இதன் காரணமாக 1967-ம் ஆண்டின் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில், விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு அறிவிக்கிறது” என்று அந்த அறிவிக்கையில் கூறப் பட்டுள்ளது.