

“பிஹார் அமைச்சர் லஞ்சம் பெறும் வீடியோ ஊழலை அம்பலப்படுத்தி உள்ளது. இதன்மூலம் வாழ்நாள் முழுவதும் ஊழலுக்கு எதிராக போராடிய ஜெயப்பிரகாஷ் நாராயணனை, நிதிஷ் குமாரும் லாலு பிரசாத்தும் அவமதித்துவிட்டனர்” என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
பிஹார் சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 49 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடந்தது. முன்னதாக ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் நகர்ப்புற வளர்ச்சித் துறை மூத்த அமைச்சர் அவதேஷ் பிரசாத் குஷ்வாகா, ரூ.4 லட்சம் லஞ்சம் பெறும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையதளங்களில் நேற்றுமுன்தினம் வெளியானது. முதல் கட்ட தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு இந்த வீடியோ வெளியானதால் ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் பதவியை அவதேஷ் உடனடியாக ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பிஹார் மாநிலம் ஜெகனாபாத் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
பிஹாரில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மக்களின் மேம் பாட்டுக்காக பாடுபட்டவர் ஜக்தேவ் பிரசாத். ‘பிஹாரின் லெனின்’ என்று போற்றப்பட்ட அவர், கடந்த 1974-ம் ஆண்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டார். எப்போது கொல்லப்பட்டார் தெரியுமா? ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக போராட்டம் நடத்திய போது சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது பிஹாரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி யில் இருந்தது. இந்தக் கொலையில் அப்போதைய ஆட்சியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த காங்கிரஸ் கட்சியுடன்தான் இப் போது முதல்வர் நிதிஷ் குமாரும் லாலு பிரசாத்தும் கூட்டணி வைத்துள்ளனர்.
இப்போது பிஹாரில் ஜெயப் பிரகாஷ் நாராயணனின் 113-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வேளையில், அவருடைய சீடர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை வாக்காளர்கள் பார்க்க வேண்டும்.
மூத்த அமைச்சர் ஒருவர் ஊழல் பெறும் வீடியோ அம்பலமாகி உள்ளது. இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஊழலை எதிர்த்துப் போராடிய ஜெயப்பிரகாஷ் நாராயணனை நிதிஷ் குமாரும் லாலு பிரசாத்தும் அவமதித்து விட்டனர். இதுபோன்ற அவமானம் மீண்டும் நடைபெறக் கூடாது.
பிஹார் அரசில் கூட்டணிக் கட்சியாக பாஜக இருந்த வரையில் இதுபோன்ற லஞ்சம் பெறும் வீடியோக்கள் இல்லை. ஊழல் இல்லை. ஆனால், ஊழலில் நிபுணத்துவம் பெற்ற லாலுவுடன் முதல்வர் நிதிஷ் குமார் கை கோத்தவுடன் மீண்டும் ஊழல் நடக்கிறது. இதுபோல் லஞ்சம் தொடர்ந்து கொண்டே இருந்தால், நீங்கள் எங்கே போவீர்கள். உங்களால் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க முடியுமா? எனவே, வாக்காளர்கள் கவனமாக இருந்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.