

2018-ம் ஆண்டு வழக்கான கட்டிட உள் அலங்கார வேலை செய்து வந்த நபர் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்துக் கொள்ளக் காரணம் என்ற குற்றச்சாட்டில் ரிபப்ளிக் டிவி தலைமைச் செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.
அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியத் தேவையில்லை, இது தனிமனித சுதந்திரத்தை தடை செய்யும் அடிப்படை உரிமை பற்றியது, இது நீதியை கேலிக்குட்படுத்துவதாகும் என்று அர்னாப் கோஸ்வாமி கைது குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு இன்று மகாராஷ்டிரா அரசுக்குக் கேள்வி எழுப்பியது.
நீதிபதிகள் சந்திராசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று அர்னாபின் ஜாமின் மனுவை விசாரித்தது.
நம் ஜனநாயகம் அசாதாரண நெகிழ்திறன் கொண்டது. மகாராஷ்டிரா அரசு அவர் தொலைக்காட்சியில் காட்டப்படுபவைகளை பெரிதுபடுத்தக் கூடாது என்று அமர்வு கருதுகிறது.
நீதிபதி சந்திராசூட் கூறும்போது, “அவரது கொள்கை என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நான் அவரது சேனலை இதுவரைப் பார்த்தது கூட கிடையாது. ஆனால் இதில் நீதிமன்றங்கள் இப்போது தலையிடவில்லை எனில் நாம் அழிவின் பாதையில் செல்வதாகவே அர்த்தம், இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அர்னாபின் தனிநபர் சுதந்திரத்தை மறுக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியது.
அர்னாப் கோஸ்வாமி இடைக்கால ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். மும்பை உயர் நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் அளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு அர்னாப் தரப்புக்கு கோர்ட் அறிவுறுத்தியது.