Published : 11 Nov 2020 15:41 pm

Updated : 11 Nov 2020 15:41 pm

 

Published : 11 Nov 2020 03:41 PM
Last Updated : 11 Nov 2020 03:41 PM

தேசிய நீர் விருதில் முதல் பரிசு பெற்ற தமிழகம்: வெங்கய்ய நாயுடு பாராட்டு

vice-president

புதுடெல்லி

தேசிய நீர் விருதில் முதல் பரிசு பெற்ற தமிழகத்துக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டுத் தெரிவித்தார்.

இரண்டாம் தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று காணொலி வாயிலாக உரையாற்றிய போது வெங்கய்ய நாயுடு கூறியதாவது :


இந்தியா ஒரு பரந்த நாடு, எந்த ஒன்றும் பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. நீர்ப் பாதுகாப்பை பொதுமக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். மக்கள் பங்கெடுப்பினால் மட்டுமே இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய முடியும். நான் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம், பெரும் அளவில் ஒரு மக்கள் இயக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியால் பல புதுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பங்கெடுப்பாளர்களின் ஈடுபாடு மற்றும் மக்களின் ஈடுபாட்டுடன் கூடிய பங்கெடுப்பு காரணமாக அவை எல்லாம் முன்னேற்றத்தை நோக்கி நடைபோடுகின்றன.

தண்ணீர் ஒரு வரையறுக்கப்பட்ட வளம், அளவற்ற வளம் அல்ல. இதனை மக்களிடம் திரும்ப, திரும்ப எடுத்துச் சொல்ல வேண்டும். நீர்ப் பாதுகாப்பு, நீர் வீணாவதை குறைத்தல் ஆகியவை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படாவிட்டால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

பூமி 3% அளவு தண்ணீரை மட்டுமே நன்னீராகக் கொண்டிருக்கிறது. இதில் 0.5% மட்டுமே குடிதண்ணீராகக் கிடைக்கிறது. எனவே ஒவ்வொரு குடிமகனும் இந்த குறைந்த அளவு தண்ணீரை நியாயமாகப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பாதுகாப்பை நமது வாழ்க்கை முறையில் ஒன்றாக ஆக்கும் வகையில் நமது வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

தண்ணீரை பாதுகாப்பதற்கான செய்தியை, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு துளி தண்ணீரும் சேமிக்கப்பட வேண்டும். மனிதகுலத்துக்கு முன்னால் உள்ள சவாலை எல்லோரும் புரிந்து கொண்டால் அது சாத்தியமாகும்.

தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வெகு ஜன ஊடகங்களின் வழியே தொடர் இயக்கம் தேவை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை இந்த இயக்கத்தில் ஈடுபாட்டுடன் பங்கெடுக்க வேண்டும்.

இப்போது ஆண்டு ஒன்றுக்கு இந்தியாவின் தண்ணீர் தேவை என்பது தோராயமாக 1100 பில்லியன் க்யூபெக் மீட்டராக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு, நகரமயமாதல், தொழிற்மயமாதல் , விவசாய நடவடிக்கைகள் விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக தண்ணீர் தேவை தொடர்ந்து அதிகரிப்பதால் இது 2050-ம் ஆண்டுக்குள் 1447 பில்லியன் க்யூபெக் மீட்டராக அதிகரிக்கக் கூடும்.

தண்ணீர் உபயோகம் குறைக்கப்படும் போது, தண்ணீரை நிலத்தில் இருந்து எடுப்பதற்கான பம்ப் வசதிக்கான மின்சாரம், வீடுகள், அலுவலகங்கள், விவசாயம் ஆகியவற்றுக்கு தண்ணீர் விநியோகிப்பதற்கான மின்சாரம் குறைவாக உபயோகிக்கப்படும். இதன் விளைவாக சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவதும் குறையும்.

நாட்டில் திறன் வாய்ந்த தண்ணீர் மேலாண்மை மேற்கொள்வதற்காக தேசிய தண்ணீர் கொள்கை மறுசீரமைக்கப்பட்டிருப்பது, வலுவான கொள்கை கட்டமைப்பை உருவாக்கும். கங்கை தூய்மைப் படுத்துதல் உட்பட 2014-ம் ஆண்டு முதல் தண்ணீர் ஆளுகை என்பது நாட்டின் வளர்ச்சிக் கொள்கையில் முன்நிறுத்தப்பட்டுள்ளது.

விரிவான தகவல் தொடர்பு மற்றும் சொத்து உருவாக்குதல் வாயிலாக தண்ணீர் பாதுகாப்பை பொதுமக்கள் இயக்கமாக மாற்றுவதை ஜல் சக்தி அபியான் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு புதிய கட்டத்திலும் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்குவதை உள்ளாட்சி அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.

தேசிய தண்ணீர் விருதில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் வகித்த முறையே தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பாராட்டுத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது நல்ல பணிகளுக்கான பாராட்டு மட்டும் அல்ல. பல்வேறு பங்கெடுப்பாளர்களை ஊக்குவித்து நாட்டின் தண்ணீர் வளத்தை திறனுடன் நிர்வகிப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறது’.

இவ்வாறு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

தவறவிடாதீர்!

புதுடெல்லிவெங்கய்ய நாயுடுதேசிய நீர் விருதுVice Presidentபிரதமர் நரேந்திர மோடிபூமி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x