பட்டாசு விற்பனைக்குத் தடை: கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

பட்டாசு விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் தடைவிதித்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் சனிக்கிழமை காளி பூஜை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காளி பூஜை, சாத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகளில் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கவுதம் ராய், புர்ரா பஜார் பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரின் விடுமுறை அமர்வு இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து கூறியதாவது:

''பண்டிகைகள் முக்கியமானவைதான். ஆனால், நோய்த் தொற்றுகளுக்கு மத்தியில் இன்று மக்கள் வாழ்க்கையே அழிவின் விளிம்பில் உள்ளது. கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உயிரைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.

இந்தச் சூழ்நிலையில் நாம் அனைவரும் உயிருக்குப் போராடுகிறோம். நமது வீடுகளில் வயதானவர்கள் உள்ளனர். இந்த நேரத்தில், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. மேலும், கள நிலவரம் நன்கு அறிந்த கொல்கத்தா நீதிமன்றத்துக்கு மக்களுக்கு என்ன தேவை என்பது தெரியும்.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, காளி பூஜையில் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது.

உள்ளூர் நிலவரத்தைக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் நன்கு அறிந்திருக்கிறது. எனவே, அங்குள்ள மக்களுக்கு என்ன தேவையோ அதை நீதிமன்றம் செய்ய அனுமதிக்க வேண்டும்''.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in