

பிஹாரில் சிராக் பாஸ்வானின் கட்சி தனித்துப் போட்டியிட்டதால் நிதிஷ் குமார் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதாக கருதப்படுகிறது. இதன் பின்னணியில், ஆட்சியில் அமர பாஜக செய்ததாகக் கருதப்பட்ட தந்திரம் பலித்துள்ளது.
பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (எல்ஜேபி) விலகியது. 143 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவித்தது. முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியை மட்டும் எதிர்ப்பதாக சிராக் பாஸ்வான் அறிவித்தார். என்றாலும் ஒருசில தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராகவும் அவர் வேட்பாளர்களை நிறுத்தினார்.
எல்ஜேபியின் பல தொகுதி களில் அதன் வேட்பாளர்களாக பாஜகவில் இருந்து விலகியவர்கள் போட்டியிட்டனர். இதனால் நிதிஷின் வாக்குகளை எல்ஜேபி பிரிக்கும் வாய்ப்புகள் உருவாகின. இதனால் மிகக் குறைந்த வாக்குஎண்ணிக்கையில் ஜேடியு வேட்பாளர்கள் பல தொகுதிகளில் தோல்வியைத் தழுவினர். அதிக தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிதிஷ் கட்சி, இதன் காரணமாக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் முதல் இடத்தையும் பாஜக 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன இதன் பின்னணியில் பேசப்பட்ட பாஜகவின் அரசியல் தந்திரம் பலன் அளித்திருப்பதாகக் கருதப் படுகிறது.
இது குறித்து ஜேடியு மூத்த தலைவர் பவன் வர்மா ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “முதல்வர் பதவியை தாம் விரும்பினால் நிதிஷ் குமார் மீண்டும் மெகா கூட்டணியில் சேர்ந்து விடுவார் என்ற அச்சம் பாஜகவிடம் இருந்தது. இதனால் சிராக் பாஸ்வானை வைத்து தனது அரசியல் தந்திரத்தை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. சிராக் பாஸ்வானை மிரட்டி கூட்டணியில் தக்க வைப்பது பாஜகவுக்கு பெரிய விஷயமல்ல. இனி மத்தியில் அமைச்சராகி முதல்வர் பதவியை பாஜகவுக்கு விட்டுத்தருவதை தவிர நிதிஷுக்கு வேறு வழியில்லை” என்றார்.
எல்ஜேபிக்கு 1 இடம் மட்டுமே
இதனிடையே, தனித்துப் போட்டியிட்டு தேர்தலுக்குப் பிறகு ‘கிங் மேக்கர்’ ஆகலாம் என்றசிராக் பாஸ்வானின் கனவும் தகர்ந்துள்ளது. எல்ஜேபி 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள சிராக் பாஸ்வானுக்கு ஒரு வகையில் லாபம் கிடைத்துள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு முன் கட்சியை தொடங்கிய ராம் விலாஸ் பாஸ்வானின் அரசியல் வாரிசாக சிராக் பாஸ்வானை பிஹார் மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
சிராக் பாஸ்வானின் செயலுக்காக மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவால், அவருக்கு பதிலாக என்ற வகையில் சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.