Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

தேர்தல் அதிகாரிகளுக்கு நிதிஷ் குமார் நெருக்கடி: தேஜஸ்வி குற்றச்சாட்டு

நெருக்கமான போட்டி உள்ள தொகுதிகளில் ஐஜத - பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு முதல்வர் நிதிஷ் குமார் நெருக்கடி கொடுத்ததாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

12 மணி நேரமாகியும் பிஹார் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை. பல தொகுதிகளில் ஆர்ஜேடி கூட்டணி வேட்பாளர்களுக்கும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கும் குறைந்த வாக்கு வித்தியாசத்தோடு நெருக்கமான போட்டி உள்ளது. அதுபோன்று நெருக்கமான போட்டி உள்ள தொகுதிகளில் ஐஜத - பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு முதல்வர் நிதிஷ் குமாரும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் நெருக்கடி கொடுத்து சதியில் ஈடுபடுகின்றனர்.

குறைந்தது 10 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ஜேடி கூட்டணி வேட்பாளர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை இன்னும் வழங்கவில்லை. பாஜக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்குமாறு தலைமைச் செயலாளர் மூலம் அதிகாரிகளுக்கு முதல்வர் நிதிஷ் குமார் நெருக்கடி கொடுக்கிறார். ஆர்ஜேடி வேட்பாளர்களின் வெற்றியைத் தடுக்க சதி நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x