Published : 10 Nov 2020 10:17 PM
Last Updated : 10 Nov 2020 10:17 PM

150 நாடுகளுக்கு இந்தியா அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கி வருகிறது: நரேந்திர மோடி

புதுடெல்லி

பெருந்தொற்றுக் காலத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவின் மருந்து நிறுவனங்கள் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு காணொலிக் காட்சி மூலம் இன்று நடைபெற்றது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்திய குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

இதர எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர். எஸ்சிஓ அமைப்பின் தலைமைச் செயலாளர், பிராந்திய தீவிரவாதத் தடுப்பு அமைப்பின் செயல் இயக்குநர், எஸ்சிஓ அமைப்பில் மேற்பார்வையாளர்களாக உள்ள ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய நாடுகளின் அதிபர்கள் இதில் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி மூலம் நடக்கும் முதல் எஸ்சிஓ உச்சி மாநாடு இது. மேலும், இது, கடந்த 2017ம் ஆண்டில் எஸ்சிஓ அமைப்பில் இந்தியா முழு உறுப்பினரானபின் நடைபெறும் 3வது கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கோவிட்-19 நெருக்கடி சவால்களுக்கு இடையிலும், இந்த மாநாட்டை நடத்துவதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

கோவிட் தொற்று பாதிப்புக்குப்பின் ஏற்பட்டுள்ள சமூக மற்றும் நிதி பாதிப்புக்களுக்குள்ளான உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மையின் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் சுட்டிக் காட்டினார். 2021 ஜனவரி ஒன்றாம் தேதி முதல், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருக்கப் போகும் இந்தியா, உலகளாவிய நிர்வாகத்தில், விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டு வர, சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மையில் கவனம் செலுத்தும்.

பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் வளம், தீவிரவாதம், சட்டவிரோதமான ஆயுதங்களைக் கடத்துதல், போதை மருந்து மற்றும் பணம் கையாடல் போன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவின் ராணுவ வீரர்கள், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் 50 திட்டங்களில் பங்கேற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பெருந்தொற்றுக் காலத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவின் மருந்து நிறுவனங்கள் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்தியங்களுடன் இந்தியாவின் வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்பைக் கோடிட்டுக் காட்டிய பிரதமர், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து முனையம், சபாகர் துறைமுகம் மற்றும் அஸ்கபாத் ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் பிராந்தியங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்த இந்தியா உறுதியாக உள்ளது என்று கூறினார்.

வரும் 2021- ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் இருபதாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் அதனை கலாச்சார ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டாகக் கடைப்பிடிப்பதற்கு தமது முழு ஒத்துழைப்பை அளிப்பதாகவும், இந்திய தேசிய அருங்காட்சியகம் சார்பாக புத்த கலாச்சாரம் குறித்த முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கண்காட்சி, இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உணவுத் திருவிழா மற்றும் 10 மாநில மொழிகளின் இலக்கியங்களை ரஷ்ய, சீன மொழிகளில் மொழிபெயர்த்தல் போன்ற இந்தியாவின் முயற்சிகள் தொடர்பாகவும் பிரதமர் பேசினார்.

வரும் நவம்பர் 30- ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் குழுவில் பங்கேற்கும் அரசுத் தலைவர்கள் இடையேயான அடுத்த கூட்டத்தைக் காணொலி வாயிலாக நடத்த இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் புதுமை மற்றும் புது நிறுவனங்களுக்கான (ஸ்டார்ட்-அப்) சிறப்பு பணிக்குழு மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த துணைக் குழுவையும் அமைக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் மூலம் உலகப் பொருளாதாரம் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொருளாதார வளர்ச்சி மேலும் உத்வேகம் அடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள தஜிகிஸ்தான் குடியரசின் அதிபர் எமோமலி ரஹ்மோனுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், இந்தியா முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் உறுதி அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x