

குஜராத்தில் 8 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
குஜராத்தில் காலியாக இருந்த, லிம்டி, அப்டாசா, கப்ராடா, டாங், கர்ஜான், தாரி, கதாடா, மோர்பி ஆகிய 8 தொகுதிகளுக்கும் கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. 8 தொகுதகளில் 81 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலியான 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததையடுத்து இடைத்தேர்தல் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி, தொடர்ந்து நடந்தது . இதில் லிம்டி, அப்டாசா, கப்ரடா, டாங், கர்ஜான் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இடையே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர்.
ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணப்பட்டபோது, காங்கிரஸ் வேட்பாளர்களை பாஜக வேட்பாளர்கள் முந்திச் சென்று 8 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றனர். வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 8 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
மோர்பி தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரிஜேஷ் மேர்ஜா வெற்றி பெற்றார்.
லிம்டி தொகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் கிரித்திசின் ராணாவும், அப்டாசா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரதுமன்சின் ஜடேஜாவும் வெற்றி பெற்றனர்.
கப்ராடா தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜிது சவுத்ரி, டாங் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜய் படேல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கர்ஜான் தொகுதியில் பாஜக வேட்பாளர் அக்சய் படேல், தாரி தொகுதியில் பாஜக வேட்பாளர் ககாதியா, கதாடா தொகுதியில் பாஜக வேட்பாளர் அத்மாராம் பார்மர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதனால் பாஜக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர். காந்தி நகரில் பாஜக தொண்டர்கள் ஆட்டம் ஆடியும், பட்டாசுகளை வெடித்தும் வெற்றியைக் கொண்டாடினர்.