

பிஹார் தேர்தலில் ஒவைஸியை ஏவி விட்டு பாஜக வாக்குகளை பிரித்துள்ளது, மதச்சார்பற்ற கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி எச்சரித்துள்ளார்.
பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் இணைந்த மகா கூட்டணி முன்னிலை பெற்றாலும், அதன்பின் அடுத்தடுத்த சுற்றுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலைபெற்று வருகிறது.
243 இடங்களில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி தேவை. ஆனால் தற்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 119 இடங்களில் பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளது.
தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்பில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி ஆட்சிையப்பிடிக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 116 இடங்களில் மட்டுமே ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
அசாசுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியதாவது:
‘‘பிஹார் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியின் வாக்குகளை ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி பெருமளவு பிரித்துள்ளது. ஒவைஸியை ஏவி விட்டு பாஜக இந்த வேலையை செய்துள்ளது. எனவே மதச்சார்பற்ற கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும்.’’ எனக் கூறினார்.