

கேரளாவில் அரிசி, ராகியால் செய்யப்பட்ட கேக்கை வெட்டித் தனது முதல் பிறந்த நாளை ஸ்ரீகுட்டி யானை கொண்டாடியது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி தென்மாலா வனப்பகுதியில் இருந்து ஒரு யானைக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீகுட்டி யானையின் உடல் முழுக்கக் காயங்கள் இருந்தன.
3 வாரக் குட்டியாக இருந்த ஸ்ரீகுட்டி யானை பிழைக்க, அப்போது 40 சதவீத வாய்ப்பு மட்டுமே இருந்தது. முதலுதவி அளித்துவிட்டு, தாய் யானை வந்துவிடும் என்று வனத்துறையினர் ஒரு நாள் அங்கேயே காத்திருந்த நிலையில், எந்த யானையும் வரவில்லை. பின்னர் கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்து வரப்பட்ட ஸ்ரீகுட்டிக்கு குளுக்கோஸும் லாக்டோஜெனும் அளிக்கப்பட்டது.
மெல்ல மெல்ல உடல் தேறிய நிலையில் ஸ்ரீகுட்டி யானை, பி-புரோட்டீன், ராகி ஆகியவற்றை உட்கொள்ள ஆரம்பித்தது. தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கும் ஸ்ரீகுட்டிக்குக் கடந்த 8-ம் தேதி கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
விழாவில் யானைப் பாகனுடன் கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் 15 யானைகளும் கலந்துகொண்டன. ஸ்ரீகுட்டி யானை தனது நன்றியைச் செலுத்தும் விதமாக, தன்னைக் காப்பாற்றிய ஓய்வுபெற்ற தலைமை வனக் கால்நடை அலுவலர் ஈஸ்வராவுக்கு ஆசீர்வாதம் அளித்தது.
விழாவில் அரிசி மற்றும் ராகி கொண்டு தயாரிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டது. காப்புக்காடு சூழல் மேம்பாட்டுக் குழுவினர் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.