

கடந்த 2019-ம் ஆண்டுக்கான இரண்டாவது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா, நாளை மற்றும் நாளை மறுதினம் காணொலி காட்சி மூலம் நடக்கிறது.
மத்திய நீர்வள அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும், நீர்வளப் பாதுகாப்பு, மேலாண்மை துறைகளில் சிறப்பாக செயல்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஊக்குவிப்பதற்காக, தேசிய நீர் விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், இது நீரின் முக்கியத்துவத்தையும், நீர் பயன்பாடு முறைகளை சிறப்பாக பின்பற்றுவது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. பல பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள், கோப்பைகள், ரொக்கப் பரிசுகள், இந்த விழாவில் வழங்கப்படுகின்றன.
புதிய நிறுவனங்கள், முன்னணி அமைப்புகள் ஆகியவை நீர்வளப் பாதுகாப்பிலும், மேலாண்மை நடவடிக்கைகளிலும் ஈடுபட இந்த நிகழ்ச்சி, வாய்ப்பளிக்கிறது.
தேசிய நீர் விருது, கடந்த ஆண்டு ‘மைகவ்’ இணையதளம் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் இ-மெயில் மூலம் தொடங்கப்பட்டது. இந்த விருதுகளைப் பெற மொத்தம் 1,112 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை நடுவர் குழு ஆய்வு செய்து 16 பிரிவுகளில் வெற்றியாளர்கள் 98 பேரை தேர்வு செய்தது.
சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம பஞ்சாயத்து, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, சிறந்த ஆராய்ச்சி, சிறந்த புதுமை கண்டுபிடிப்பு, புதிய தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த மாநிலம், மாவட்டம், ஒழுங்குமுறை ஆணையம் தவிர மற்ற பிரிவினருக்கு ரொக்கப் பரிசுகள் அளிக்கப்படுகின்றன.
வரும் 11ம் தேதி நடைபெறும் முதல் நாள் நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது வழங்கும் விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
வரும் 12ம் தேதி நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விருது பெறுபவர்கள் உட்பட பலர் காணொலி காட்சி மூலம் கலந்து கொள்வர்.