Published : 10 Nov 2020 03:38 PM
Last Updated : 10 Nov 2020 03:38 PM

பிஹார் தேர்தல் முடிவுகள்: 50 தொகுதிகளில் கடும்போட்டி; முன்னிலையில் வாக்குகள் வித்தியாசம் 1000க்கும் குறைவே

பிஹார் தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 126 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

ஆர்ஜேடி தலைமை மகா கூட்டணி 104 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இன்று இரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. இதில் பாஜக தனியே 73 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் தனியே 49 தொகுதிகளிலும் வென்றுள்ளது. ஆர்ஜேடி தனியே 66 தொகுதிகளிலும் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் சிபிஐ எம்.எல். 11 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஆனால், இதை வைத்து யார் வெற்றி என்று முன்கூட்டியே கூறமுடியாது. ஒன்று நிதிஷ் குமார் முதல்வரா என்பதை பாஜக முடிவு செய்யாதவரை அங்கு என்.டி.ஏ. ஆட்சிக்கு உத்தரவாதமில்லை. ஏனெனில் தான் முதல்வரில்லை என்றால் நிதிஷ் என்ன செய்வார் என்று கூற முடியாது, அதே வேளையில் நிதிஷுக்கு எதிராக அத்தனை வாக்குகள் ஆர்ஜேடி, காங், சிபிஐ எம்.எல். கட்சிகளுக்கு விழுந்திருக்கும் போது நிதிஷை முதல்வராக அறிவித்தால் அது பாஜகவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் என்று பாஜக தலைமை யோசிக்க வாய்ப்புள்ளது.

இது ஒருபுறமிருக்க, ஒரு 50 தொகுதிகளில் சவாலாக இரு கட்சிகளும் சம அளவில் சென்று கொண்டிருக்கின்றன வாக்கு வித்தியாசம் 1,000க்கும் கீழ் தான் இந்தத் தொகுதிகளில் முன்னிலை பெற்று வருபவர்களுக்கும் அடுத்த இடத்தில் உள்ள வேட்பாளருக்குமான வாக்குகள் வித்தியாசம் 1000க்கும் குறைவாக இருப்பதால் எப்படி மாறும் என்று கூற முடியாது என்கின்றனர் தேர்தல் ஆய்வாளர்கள்.

இந்த 50 தொகுதிகளில் 25 தொகுதிகளில் டாப் 2 வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்குகள் வித்தியாசம் 500க்கும் கீழ்தான் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். பல ஆய்வுத் தகவல்களின் படி பார்த்தால் 120 தொகுதிகளில் டாப் 2 வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 3,000க்கும் குறைவுதான் என்கின்றனர்.

இதில் மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்னவெனில் சிபிஐ (எம்.எல்.லிபரேஷன்) இந்தத் தேர்தலில் நல்ல சாதக பலன்களை அடைந்துள்ளது. 19 தொகுதிகளில் 13-ல் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தேஜஸ்வி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ஏன் அவ்வளவு இடங்கள் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல இடங்களில் எல்.ஜே.பி. கட்சி காங்கிரஸ், ஆர்ஜேடி வாக்குகளைச் சிதறடித்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஜேடியு கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்கள் அவர்கள் தொகுதியில் முன்னிலை பெற்று வருகின்றனர்.

நிதிஷுக்கு எதிராக இருக்கும் அதிருப்தி பாஜகவுக்கு எதிராக இல்லை என்பதை முடிவுகள் காட்டுகின்றன.

சாதிக்கணக்கீடுகளில் பாஜக துல்லியமாகக் கணக்கிட்டு காய்களை நகர்த்தியுள்ளமை அதன் வெற்றியில் தெரிகிறது. இன்னும் வாக்குகள் நிறைய எண்ண வேண்டியிருப்பதால் யார் வின்னர் என்று தெளிவாக இப்போதைகு அறுதியிட முடியாது என்கின்றனர் தேர்தல் ஆய்வாளர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x