

பிஹாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலி்ல் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 127 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 73 இடங்களில் முன்னிலைபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் இணைந்த மகா கூட்டணி முன்னிலை பெற்றாலும், அதன்பின் அடுத்தடுத்த சுற்றுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலைபெற்று வருகிறது.
243 இடங்களில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி தேவை. ஆனால் தற்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 127 இடங்களில் பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளது.
தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்பில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி ஆட்சிையப்பிடிக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 67 இடங்களில் மட்டுமே ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முன்னிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் 144 இடங்களில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 67 இடங்களில்தான் முன்னிலையில் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில்தான் முன்னிலை வகிக்கிறது. மகா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான சிபிஐ-எம்எல் 12 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
அதேசமயம், என்டிஏ கூட்டணியில் போட்டியி்டட நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 115 இடங்களில் போட்டியிட்டதில், 49 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 110 இடங்களில் போட்டியி்ட்ட பாஜக 73 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
பாலிவுட்டின் முன்னாள் அரங்கு வடிவமைப்பாளர் முகேஷ் ஷானியின் கட்சியான விகாஷில் இன்சான் கட்சி என்டிஐ கூட்டணியில் இடம் பெற்று 11 இடங்களில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மத்தியில் என்டிஏ கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்தில் தனித்துப் போட்டியிட்டது சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி. இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 இடங்களில் மட்டுமே லோக் ஜனசக்தி முன்னிலையில் உள்ளது.
அசாசுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 3 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இந்தத் தேர்தலில் பாஜக 73 இடங்களுடன் இதுவரை 19.65 சதவீத வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, இதை நிலை தொடர்ந்தால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பெற்றுள்ள 23 சதவீத வாக்குகளையும் கடந்து செல்லும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி இதுவரை 49 இடங்களில் முன்னிலையுடன் 15.65 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். பாஜகவுடன் ஒப்பிடும்போது ஜேடியு பெற்ற வாக்குகள் அளவு குறைவுதான். பாஜக, ஜேடியு ஆகிய இரு கட்சிகள் சேர்ந்து இதுவரை 35 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. அதேசமயம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி சார்பில் 32 சதவீத வாக்குகள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.
ஆதலால் இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக்க கூட்டணியல் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியைவிட, பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. முதல்வர் நிதிஷ்குமாரின் நிர்வாகம், பெயர், ஆட்சி ஆகியவற்றுக்கு மக்கள் போதுமான அளவில் அங்கீகாரத்தை அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
இந்தத் தேர்தலில் நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தே பாஜக தேர்தலைச் சந்தித்து. ஆனால், எதிர்பார்த்ததைவிட, ஜேடியு கட்சியைவிட, பாஜகவின் செயல்பாடும், வாக்குவங்கியும் அதிகரித்துள்ளது. இதனால் முதல்வர் பதவிக்கு நிதிஷ்குமாருக்கு பதிலாக வேறு ஒருவரை பாஜக பரிந்துரைக்க ஆலோசிக்கலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாஜக தேசியப் பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ பிரதமர் மோடிக்கு கிடைத்த நற்பெயரால்தான் பிஹாரில் மீண்டும் பாஜக, ஜேடியு கூட்டணி வெற்றியை நோக்கி நகர்கிறது. ஆட்சி அமைப்பது குறித்தும், முதல்வர் வேட்பாளர் குறித்தும் இன்று மாலை ஆலோசிக்கப்படும்” எனத்தெரிவித்தார்.
இதன் மூலம் நிதிஷ் குமாரை மாற்றக் கோரி பாஜக சார்பில் அழுத்தம் ஏதும் கொடுக்கலாம் அல்லது பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளருக்கு ஒருவரை பரிந்துரைக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.