

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. இது ஒருபுறம் இருக்க மோடியோ தனது அமைச்சரவையை இறுதி செய்யும் பணியை சத்தம் இல்லாமல் செய்து வருகிறார்.
மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை அமைச்சகமும், முரளி மனோகர் ஜோஷிக்கு பாதுகாப்பு அமைச்சகமும் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. அருண் ஜேட்லிக்கு, நிதி அமைச்சகம் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கப்படும் என தெரிகிறது.
மக்களவை சபாநாயகர் பொறுப்புக்கு ஜார்கண்ட் மாநில பாஜக மூத்த தலைவர் காரியா முண்டா பெயர் அடிபடுவதாக தெரிகிறது.
புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்த இலாகா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டுமானால் யாருக்கு எந்த அமைச்சகம் என்பது நரேந்திர மோடிக்கு மட்டுமே தெரியும்.
மோடியின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்த நெருங்கிய வட்டாரம் கூறியதாவது: "மோடி மிகவும் பொறுமைசாலி. அவர் எல்லாவிதமான கருத்துகளையும் பொறுமையாக கேட்டுக் கொள்வார். விசயங்களை எளிதில் உள்வாங்கிக் கொள்வார். ஆனால் இறுதியில் அவருடைய பாணியில் பிரச்சினைகளுக்கு தீர்வை தருவார்" என்றார்.
கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் கூறுகையில்: "மோடி, தனது தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு பல்வேறு இலக்குகளை முன்வைப்பார். அதுவும் அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றுமாறு கெடுவும் நிர்ணயிப்பார். எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுபவர் மோடி. அவர் ஒரு நாளில் 18 மணி நேரம் பணிபுரிபவர்" என புகழ்ந்துள்ளார்.
நேற்று (செவ்வாய்கிழமை) பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆற்றிய உரையில் மோடி தனது எண்ண ஓட்டத்தை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
"நாம் இங்கே பதவிக்காக இல்லை. 125 கோடி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே இருக்கிறோம். நமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதே நமது முதல் கடமை. பொறுப்புகளை நிறைவேற்றும் காலம் கனிந்து விட்டது". இவ்வாறு கட்சித் தொண்டர்கள் மத்தியில் தெரிவித்தார்.