

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 8 இடங்களில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாஜக அரசு இருந்த நிலையில் 20 இடங்களில் முன்னிலையுடன் பயணிக்கிறது. இதனால் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார்.
அதேசமயம், ஆட்சியை இழந்து தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, 28 இடங்களில் வென்றால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலையில், 7 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. சுயேச்சை ஓரிடத்தில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சியுடனும், மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த கமல்நாத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சியிலிருந்து பிரிந்த மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, அதன்பின் பாஜகவில் இணைந்தார்.
ஜோதிராதித்யாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். அந்த வகையில் 25 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதால், கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக தலைமையில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக 28 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ஆட்சியைத் தக்கவைக்க 8 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.
அதாவது, 229 எம்எல்ஏக்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் 107 எம்எல்ஏக்களுடன் பாஜக ஆட்சியில் இருக்கிறது. பெரும்பான்மைக்கு இன்னும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு முதல்வர் சவுகானுக்குத் தேவை.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியில் அமர 28 எம்எல்ஏக்கள் ஆதரவும், குறைந்தபட்சம் ஆட்சியமைக்கக் கோர 21 எம்எல்ஏக்கள் ஆதவும் தேவைப்பட்டது.
ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியதிலிருந்து பாஜகவே தொடர்ந்து பெரும்பாலான இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி பாஜக 20 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுயேச்சை ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளது.
அமைச்சர்களாக இருக்கும் அதில் சிங் கன்சானா, கிரிராஜ் தான்தோட்டியா, ஓபிஎஸ் பதோரியா ஆகியோர் இழுபறியுடன் செல்கின்றனர். குவாலியர், குவாலியர் கிழக்கு, தாப்ரா, போமோரி, அசோக் நகர், முகோலி, சுர்கி, பாடா மல்ஹேரா, அனுப்பூர், சான்ச்சி, ஹட்பிப்லியா, மன்தாட்டா, நேபான்நகர், பட்நாவர், சுவாஸ்சரா, ஜவுரா ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற்போல், சிந்தியாவின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபட்டு, பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.