

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் முன்னிலையில் ெசன்ற மகா கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆனால், பின்னடைவைச் சந்தித பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சேர்ந்த தேசிய ஜனநாயக்ககூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அக்டோபர் 28-ம் தேதி முதல்கட்டத் தேர்தலும், நவம்பர் 3, 7-ம் தேதிகளில் 2 மற்றும் 3-ம் கட்டத் தேர்தலும் நடந்தது. இன்று வாக்குகள் அனைத்தும் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் 7.30 கோடி வாக்காளர்கள் அதாவது 57 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. தொடக்கத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி முன்னிலை வகித்தது, பாஜக நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சேர்ந்த தேசிய ஜனநாயக்ககூட்டணி பின்னடைவைச் சந்தித்தது.
ஆனால், நேரம் செல்லச் செல்ல, மகா கூட்டணி, தேசிய ஜனநாயகக்கூட்டணி இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இரு தரப்பினரும் குறைந்த இடங்கள் முன்னிலையில் மாறி, மாறிச் சென்றனர். ஒரு கட்டத்தில் மகாகூட்டணியை முந்தி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி முன்நிலை வகிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பாஜக 35 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
லோக் ஜனசக்தி கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினி்ஸ்ட்)6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
விகாசீல் இன்சான் கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.