

பிஹாரில் இன்று நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தொடக்கத்தில் மகா கூட்டணி முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த நிலவரங்கள் வரும்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கடும் போட்டி அளித்ததால் இரு தரப்பும் சமபோட்டியுடன் உள்ளனர். இருவரும் சம எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அக்டோபர் 28-ம் தேதி முதல்கட்டத் தேர்தலும், நவம்பர் 3, 7-ம் தேதிகளில் 2 மற்றும் 3-ம் கட்டத் தேர்தலும் நடந்தது. இன்று வாக்குகள் அனைத்தும் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் 7.30 கோடி வாக்காளர்கள் அதாவது 57 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்தத் தேர்தலில் முடிவுகளை அறிவிக்க தாமதமாகும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன
ஏனென்றால், வழக்கமாக 72,723 வாக்குப்பதிவு மையங்கள் மட்டுமே வைக்கப்பட்ட நிலையில் கரோனா பரவல் காரணமாக வாக்குப்பதிவு மையங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6ஆயிரத்து 515 ஆக உயர்த்தப்பட்டது. ஏறக்குறைய 46.5 சதவீதம் வாக்கு மையங்கள் அதிகரிக்கப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவே ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான மகாகூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தன. பாஜக, நிதிஷ் குமாரின் தேசிய ஜனநாயக்க கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மகா கூட்டணிக்கும் கடுமையான போட்டி இருந்தது. இரு கூட்டணியும் சம அளவில் முன்னிலையுடன் சென்றனர்.
ஆனால்,ஒரு கட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸின் மகா கூட்டணி முந்தியது. ஆனால், தற்போது மகா கூட்டணி 117இடங்களிலும், தேசிய ஜனநாயக்க கூட்டணி 117 இடங்களிலும் கடும் போட்டியில் இருக்கின்றனர். இரு கூட்டணியும் மிகவும் குறைந்த இடங்கள் முன்னிலையில் செல்வதால் அடுத்தடுத்த சுற்றுகளில் முடிவுகள் எப்படி வேண்டுமானும் மாறக்கூடும்.
ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், இமாம்காஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி, ஹசன்பூர் தொகுதியில் போட்டியிட்ட தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.