108 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் திம்மக்காவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: மரங்களின் அன்னைக்கு குவியும் பாராட்டு

சாலுமரத திம்மக்கா
சாலுமரத திம்மக்கா
Updated on
1 min read

கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான மரங்களை வளர்த்த 108 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்காவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மகளிர் அமைப்பினரும் திம்மக்காவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் குனிகல் கிராமத்தை சேர்ந்தவர் சாலுமரத திம்மக்கா. 108 வயதான இவர் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் குனிகல் - குதூர் இடையேயான சாலையின் ஓரத்தில் வரிசையாக 400 ஆலமரக் கன்றுகளை நட்டு வளர்த்ததால் 'சாலுமரத திம்மக்கா' என அழைக்கப்படுகிறார். இதனால் பொட்டல் காடாக இருந்த அந்த கிராமம் தற்போது சோலைவனமாக மாறியுள்ளது.

இதேபோல நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக் கன்றுகளை நட்டுள்ளார்.

திம்மக்காவின் சாதனைகளை பாராட்டி கர்நாடக அரசு கன்னட ராஜ்யோத்சவா, கன்னட ரத்னா உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளது. இந்திய சிறந்த தேசிய குடிமகள் விருது பெற்ற இவருக்கு கடந்த 2019-ல் பத்ம விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சாலுமரத திம்மக்காவிடம் தலைவணங்கி ஆசிபெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

2016ல் பிபிசி வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக திம்மக்கா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கர்நாடக மத்திய பல்கலைக்கழகம், சுற்றுச்சூழலுக்கு திம்மக்கா செய்த பங்களிப்பை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் அறிவித்தது. இதையடுத்து நேற்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எச்.எம். மல்லேஷ்வரய்யா பெங்களூருவில் உள்ள திம்மக்காவின் வீட்டுக்கு வந்து டாக்டர் பட்டத்தை வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட திம்மக்கா சுற்றுச்சூழலுக்காக பாடுபடும் பெண்களுக்கு இந்த பட்டத்தை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in