

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ஷாத் நகரைச்சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் நிவாஸ். இவரது மகள்ஐஸ்வர்யா (19). 12-ம் வகுப்பில்98.5 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற ஐஸ்வர்யா, டெல்லியில் உள்ள லேடி ராம் கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் விடுதியை காலிசெய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினார். தற்போது மீண்டும் டெல்லி செல்ல வேண்டி இருந்தது. ஆனால்படிப்பை தொடரவும், ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்தவும் லேப்டாப் வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார்.
ஆனால் கரோனா பொது முடக்கத்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையால் லேப்டாப் வாங்கித் தரமுடியவில்லை. இதையடுத்து கடந்த 3-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஐஸ்வர்யா இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில், “எனது கல்விச் செலவால் பெற்றோர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நான்தொடர்ந்து படிக்க முடியாததால் எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனக்கு வரவேண்டிய ‘இன்ஸ்பையர்’ கல்வி ஊக்கத்தொகை ரூ.1.02 லட்சத்தை பெற்றோரிடம் கொடுங்கள்” என உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.
“கடந்த மார்ச் மாதம் வரவேண்டிய கல்வி ஊக்கத்தொகை இதுவரை வரவில்லை. இதனால் லேப்டாப் வாங்க இயலவில்லை. இதனால்தான் எனது மகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானாள்” என ஐஸ்வர்யாவின் தாயார் சுமதி கண்ணீர் மல்க கூறினார்.
இதுகுறிந்து தகவல் அறிந்த டெல்லி கல்லூரியின் சகமாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். அரசின் அலட்சியப்போக்கால்தான் ஐஸ்வர்யா தற்கொலை செய்துகொண்டார் எனக்கூறி பல்வேறு மாணவர் சங்கத்தினர் நேற்று கல்லூரி முன்பு ஐஸ்வர்யா படத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.