Published : 09 Nov 2020 09:31 PM
Last Updated : 09 Nov 2020 09:31 PM

பிஹார் தேர்தலில் வெல்லப்போவது யார்? - பெரும் எதிர்பார்ப்புக்கிடையே செவ்வாய் கிழமை வாக்கு எண்ணிக்கை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய் கிழமை காலை எண்ணப்படுகிறது.

243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலச் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து 3 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது.

71 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 94 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 78 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 3-ம் கட்டத் தேர்தலில் 51.4 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்த தேர்தலையொட்டி பிஹாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா சமீபத்தில் வெளியேறியது.

இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திரா குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா தளமும் (ஆர்எல்எஸ்பி) வெளியேறி விட்டது. அதேபோல் பாஜக கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சியும் வெளியேறியுள்ளது.

பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுடன் அவாம் மோர்ச்சா போட்டியிடுகிறது. பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதிஷ் குமார் தலைமையில்தான் போட்டியிடும் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. எல்ஜேபி, நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிட மறுத்து விட்டது.

அதேபோல் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளது.

தேவேந்திர பிரசாத் யாதவின் சமாஜ்வாடி ஜனதாதளக் கட்சி, ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஆகியவை 3-வது அணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாஹா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிஹார் தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

இதில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது. சில கணிப்புகளில் மொத்தமுள்ள 243 இடங்களில் ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணி 150 இடங்கள் வரை வெற்றி பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாளை (நவம்பர் 10-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 55 வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கையை முழுமையாக வீடியோ எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

8.30 மணியில் இருந்து முதல்கட்ட நிலவரம் தெரிய வரும் எனத் தெரிகிறது. பிற்பகல் 1 மணிக்குள் முடிவுகள் ஒரளவுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் தேர்தல் முடிவுகள் இழுபறியாக இருக்கும் என கருதப்படுவதால் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுபோலவே ம.பி.யில் 28 தொகுதிகள், குஜராத்தில் 8 தொகுதிகள், உ.பி.யில் 7 தொகுதிகள் என பல மாநிலங்களில் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை காலை எண்ணப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x