Published : 09 Nov 2020 07:05 PM
Last Updated : 09 Nov 2020 07:05 PM

வாரணாசியில் பல்வேறு திட்டங்கள் தொடக்கம்; அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இன்று காணொலி காட்சி மூலம் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பணி முடிவடைந்த பல திட்டங்களைத் தொடங்கியும் வைத்தார்.

ரூ 220 கோடி மதிப்பிலான 16 திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர், வாரணாசியில் ரூ.400 கோடி மதிப்பிலான 14 திட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக தெரிவித்தார்.

சாரநாத் ஒளி, ஒலி காட்சி, ராம்நகர் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை தரம் உயர்த்துதல், கழிவு நீர் அகற்றும் பணிகள், பசுக்களைப் பாதுகாப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகள், பன்னோக்கு விதைகள் சேமிப்பு கிடங்கு, 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வேளாண் உற்பத்தி சேமிப்பு கிடங்கு, ஒருங்கிணைந்த மின்சார வளர்ச்சித் திட்டம்- பகுதி 2, சம்பூர்ணானந்த் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கான வீட்டு வசதி வளாகம், வாரணாசி நகர எழிலூட்டும் விளக்கு பணிகள், 105 அங்கன்வாடி மையங்கள், 102 பசு புகலிடங்கள் உள்ளிட்டவை இன்று தொடங்கிவைக்கப்பட்ட திட்டங்களில் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், வாரணாசி நகர் மற்றும் புறநகர்ப் பகுதி மேம்பாட்டு திட்டத்தில் சுற்றுலாவும் ஒரு பகுதியாகும் என்றார். கங்கை நதி தூய்மை, சுகாதார சேவைகள், சாலை, உள்கட்டமைப்பு, சுற்றுலா, மின்சாரம், இளைஞர் நலன், விளையாட்டு, வேளாண்மை உள்பட ஒவ்வொரு துறையிலும் வாரணாசி அதிவேக வளர்ச்சி அடைந்து வருவதற்கான எடுத்துக்காட்டுகள் இவை என்று அவர் கூறினார். கங்கா செயல் திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தின் மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்து விட்டதாக இன்று அவர் தெரிவித்தார். நதியோரப் பகுதிகளின் அலங்காரம், மாசைக் குறைக்க திரவ இயற்கை எரிவாயு அறிமுகம், தகஷ்வமேத் கட்டத்தில் சுற்றுலா வளாகம் போன்ற வாரணாசியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

காசிக்கான கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தவும், புதிய வாய்ப்புகளுக்கான பாதையை உருவாக்கவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். இங்குள்ள கட்டங்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன. கங்கை கட்டங்களை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் பணிக்கு இடையே,, சாரநாத் புதிய தோற்றத்தை பெற்றுள்ளதாக அவர் கூறினார். இன்று தொடங்கப்பட்டுள்ள ஒலி, ஒளி காட்சி சாரநாத்தின் கம்பீரத்தை அதிகரிக்கும் என அவர் மேலும் கூறினார்.

காசியின் பெரும்பகுதி மின்சார வயர்கள் தொங்குவதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் இன்று தெரிவித்தார். வயர்களை தரைக்கு அடியில் பதிக்கும் மற்றொரு பகுதி பணிகள் இன்று நிறைவடைந்துள்ளன. எழில் மிகுந்த எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு, தெருக்கள் அழகுடன் திகழும் என்று அவர் கூறினார்.

வாரணாசியை மேம்படுத்துவதில் அரசு எப்போதும் உயர் முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். புதிய உள்கட்டமைப்புகள் மூலம், காசி மக்களும், சுற்றுலா பயணிகளும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி நேரத்தை வீண்டிக்க வேண்டியதில்லை என்று அவர் தெரிவித்தார். பாத்பூரிலிருந்து நகரை இணைக்கும் சாலை வாரணாசிக்கு புதிய அடையாளமாக இருக்கும் என்று அவர் கூறினார். வாரணாசி விமான நிலையத்திற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை தேவையாக இருந்த இரண்டு பயணிகள் பாலங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிட்ட அவர், வாரணாசி விமான நிலையம் தினசரி 12 விமானங்களைக் கையாண்டு வந்த நிலை மாறி, தற்போது நாளொன்றுக்கு 48 விமானங்களை கையாண்டு வருகிறது என்றார். வாரணாசியில் வசிக்கும் மக்கள் மற்றும் இங்கு வருகை தருபவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களைப் பட்டியலிட்டார்.

வாரணாசியில் கடந்த ஆறு ஆண்டுகளில், முன்பு இல்லாத வகையில் சுகாதாரத்துறையில் பணிகள் நடைபெற்றுள்ளதாக பிரதமர் கூறினார். இன்று உத்தரப்பிரதேசத்துக்கு மட்டுமல்லாமல், பூர்வாஞ்சல் முழுவதற்கும் சுகாதார வசதிகள் கொண்ட மையமாக உருவெடுத்துள்ளது. ராம்நகர் லால் பகதூர் மருத்துவமனை நவீனமயமாக்கல் உள்பட வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு சுகாதாரத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

வாரணாசியில் தற்போது அனைத்து துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அது பூர்வாஞ்சல் உள்ளிட்ட கிழக்கு இந்தியா முழுமைக்கும் பயன் அளிக்கிறது. இன்று பூர்வாஞ்சல் பகுதி மக்கள் சிறு தேவைகளுக்கு கூட டெல்லி, மும்பை ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

சர்வதேச அரிசி நிறுவனம், பால் பதப்படுத்தும் நிலையம், அழுகும் பொருள் பாதுகாப்பு மையம் போன்ற பல வசதிகள் வாரணாசி மற்றும் பூர்வாஞ்சல் விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், இத்தகைய வசதிகள் மூலம் விவசாயிகள் பெரும் பயனடைந்து வருகின்றனர் என்றார். இந்த ஆண்டு முதல் முறையாக, வாரணாசி பிராந்தியத்தில் இருந்து, பழங்கள், காய்கறிகள், நெல் ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார். இன்று தொடங்கப்பட்டுள்ள 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, காசியில் உள்ள விவசாயிகளுக்காக விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார். ஜான்சாவில் பன்னோக்கு விதை சேமிப்பு கிடங்கு மற்றும் பரவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x