விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; இல்லையெனில் மாநிலங்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள்: பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

மம்தா பானர்ஜி | கோப்புப் படம்
மம்தா பானர்ஜி | கோப்புப் படம்
Updated on
1 min read

விலை உயர்வைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் தாங்கள் தலையிட வேண்டும். இல்லையெனில், மாநிலங்களுக்கு அதற்கான அதிகாரத்தைக் கொடுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்கள் வாங்கமுடியாத அளவுக்குக் கடுமையான விலை உயர்வை எட்டின. இதனால் நாடு முழுவதும் மக்கள் மிகவும் அவதியுற்றனர்.

மத்திய அரசு சில சட்டத் திருத்தங்களை அன்மையில் கொண்டு வந்தது. தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து அகற்றுவதற்கான அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்பின்னர், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நீங்கள் தலையிடுங்கள். இல்லையெனில், அதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படையுங்கள் என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:

''அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். பதுக்கலைக் கட்டுப்படுத்தவும் விநியோகத்தை அதிகரிக்கவும் உயர்ந்துவரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.

இந்த விஷயத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பதுக்கலைக் கட்டுப்படுத்துவதற்கும், விநியோகத்தை அதிகரிப்பதற்கும், நாளுக்கு நாள் உயரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் பொதுமக்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

இல்லையெனில உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்காவது வழங்க வேண்டும். மாநில அரசுகள் தற்போது அதன் அதிகாரங்களை இழந்துவிட்டன. இதுபோன்ற பிரச்சினைகளில் மாநிலங்களின் அதிகாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் அசாதாரண விலை உயர்வு காரணமாக சாமானிய மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும் துன்பங்களை மாநில அரசாங்கங்கள் அமைதியான பார்வையாளர்களாகத் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே, வேளாண் பொருட்கள் உற்பத்தி, வழங்கல், விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைப்பது தொடர்பாக பொருத்தமான சட்டத்தைக் கொண்டுவர மாநிலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in