

சட்டப்பேரவை தேர்தலில் வெல்வது யார் என்ற வாக்குவாதம் பிஹார் செல்லும் சியால்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் எழுந்தது. இருதரப்பினர் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தில் தேஜஸ்வி பிரசாத் யாதவ் ஆதரவாளர் தாக்கப்பட்டார்.
தொலைதூரம் ஓடும் ரயில்களில் பயணிகள் தங்கள் நேரங்களை கடக்க தங்களிடையே பேசிக் கொள்வது உண்டு. இதில், ஒருவருக்கு ஒருவர் பல சுவையானத் தகவல்களை பறிமாறிக் கொள்வதும் வழக்கம்.
சிலசமயம் இவ்வாறு பேசும் பயணிகளில் இடையிலான நட்பு ரயிலில் இருந்து இறங்கிய பிறகும் தொடர்வது உண்டு. ஆனால், டெல்லியில் இருந்து காலை கிளம்பி பிஹார் வழியாக மேற்கு வங்க மாநிலம் செல்லும் சியால்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று எழுந்த பேச்சு கைகலப்பாக மாறியது.
புதுடெல்லி ரயில் நிலையத்தில் கிளம்பிய சியால்தா எக்ஸ்பிரஸில் பாட்னாவை சேர்ந்த முகம்மது அன்வர் மற்றும் முகம்மது ரபீக் பயணம் செய்தனர். இவர்களில் ரபீக், ராஷ்டிரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவின் அபிமானி.
மற்றவரான அன்வர், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமாரின் தீவிர ஆதரவாளர். இந்த இருவருக்கு இடையே ரயிலில் தொடங்கிய பேச்சுக்கு சகப்பயணிகளிலிலும் சிலர் இணைந்துளனர்.
பிஹாரில் முடிந்த தேர்தலின் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் அதில் வெல்வது யார்? என்ற வாக்குவாதத்தில் சூடு பிடித்துள்ளது. ஆரோக்கியமாகத் துவங்கிய இவ்விவாதம் இருதரப்பிலும் மோதலாகி ஆபத்தை நெருங்கியது.
இதில், லாலுவின் ஆதரவாளரான முகம்மது அன்வர் பிஹாரின் முதல்வராக தேஜஸ்வியே அமர்வார் எனக் வாதிட்டுள்ளார். இதில் கோபம் கொண்ட நிதிஷின் ஆதரவாளர்கள் அன்வர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதனால், இரண்டாவது வகுப்பில் எழுந்த கூச்சல், அருகிலுள்ள பெட்டிகளில் இருந்த பயணிகளையும் அதிர வைத்தது. இதன் மீதானப் புகார் ஜிஆர்பி காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக, அடுத்துவந்த ரயில்நிலையமான உத்திரப்பிரதேசம் கான்பூரில் ஜிஆர்பி காவல்நிலையப் படையினர் தலையிட்டு இருதரப்பினரையும் கீழே இறக்கினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் அன்வர், ரபீக் ஆகிய இருவரையும் கைது செய்து ஜிஆர்பி போலீஸார் இன்று சிறையில் தள்ளி விட்டனர்.
இதனால், பத்திரமாக தங்கள் வீடு திரும்ப எண்ணி ரயில் ஏறிய பயணிகள் உ.பி.யின் கான்பூர் சிறைக்கு செல்ல வேண்டியதாயிற்று. இவர்களுக்கு ஆதரவளித்த ஒரு ஏழு பேர் அடுத்த ரயிலில் படுக்கை வசதியின்றி அவதியுடன் வீடு திரும்பி உள்ளனர்.