

பிஹார் தேர்தலுக்கு சாதி வர்ணம் பூசிவிட்டார் மோடி, இவரே உண்மையான மோடி என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் சாடியுள்ளார்.
இந்துக்களும் மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள் என்ற லாலுவின் பேச்சைக் கண்டித்து 'யாதவகுலத்தை இழிவு படுத்திவிட்டார் லாலு' என்று பிரதமர் மோடி கூறியதற்கு நிதிஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மங்கரில் தேர்தல் கூட்டத்தில் பேசி முடித்த சில நிமிடங்களில் நிதிஷ் குமார் ட்விட்டரில் பதிவு செய்ததாவது:
உண்மையான மோடி இப்போது வெளிச்சத்துக்கு வருகிறார்.. பிஹார் தேர்தலுக்குள் சாதியை திணிக்கிறார். ஆனால் இழிவு தரும் தாத்ரி சம்பவம் குறித்து மவுனம் காத்து வருகிறார்.
இதனால்தான் வாஜ்பாயி இவரிடம் அரச தர்மத்தைக் காக்க வலியுறுத்தினார். ஆனால் இன்று வாஜ்பாயி போல் அவருக்கு அறிவுறுத்தப்போவது யார்?
முதலில் எங்கள் டிஎன்ஏ-வில் கோளாறு என்றார், பிறகு பிஹாரை பின் தங்கிய மாநிலம் எனுமாறு பிமாரு மாநிலம் என்றார், இந்த மாநில மக்கள் துரதிர்ஷ்டசாலிகள் என்றார், தற்போது லாலுவை சைத்தான் என்கிறார்”
இவ்வாறு சாடியுள்ளார் நிதிஷ் குமார்.