எந்த வருடம் ஆடு இல்லாத பக்ரீத் கொண்டாடப்படுகிறதோ அதே ஆண்டில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்படாது –பாஜக எம்.பி சாக்ஷி மஹராஜின் கருத்தால் சர்ச்சை

எந்த வருடம் ஆடு இல்லாத பக்ரீத் கொண்டாடப்படுகிறதோ அதே ஆண்டில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்படாது –பாஜக எம்.பி சாக்ஷி மஹராஜின் கருத்தால் சர்ச்சை
Updated on
1 min read

எந்த வருடம் ஆடு இல்லாத பக்ரீத் கொண்டாடப்படுகிறதோ அந்த ஆண்டு, தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கப்படாது என பாஜக எம்.பியான சாக்ஷி மஹராஜ் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில் எழுதிய இக்கருத்தால் உபியில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

உபியின் உன்னாவ் தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறை எம்.பியாக இருப்பவர் சாக்ஷி மஹராஜ். துறவியான இவர் அவ்வப்போது மதரீதியாக வெளியிடும் கருத்துக்களால் சர்ச்சையாவது வழக்கம்.

இந்தவகையில், எம்.பியான சாக்ஷி மஹராஜ் நேற்று தனது முகநூலில் பதிவிட்டக் கருத்துக்கள் உபியில் சர்ச்சை கிளம்பியுள்ளன. இந்தமுறை அவர் பக்ரீத் பண்டிகையை தீபாவளியுடன் ஒப்பிட்டு கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து பாஜக எம்.பி சாக்ஷி மஹராஜ் குறிப்பிடும்போது, ‘நம் நாட்டில் எந்த வருடம் ஆடு இல்லாத பக்ரீத் கொண்டாடப்படுகிறதோ அதே ஆண்டு, தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பது நிறுத்தப்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் காரணம் காட்டி பிஹார், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் பட்டாசு வெடிப்பதை தடை செய்துள்ளன. இந்த விவகாரம் உபியிலும் கிளம்பியதை அடுத்து பாஜக எம்.பி சாக்ஷி மஹராஜின் இக்கருத்து வெளியாகி உள்ளது.

தற்போது உபியின் எட்டு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு திரும்பிய சாக்ஷி மஹராஜுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், டெல்லியில் தனது அரசு குடியிருப்பில் மக்களவை எம்.பியான அவர் தனிமைக்கு உள்ளாகி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in