பணமதிப்பு நீக்கத்திற்கு பின்புதான் அதிக ஊழல்; கறுப்புப் பணம் குறையவில்லை: பிரதமருக்கு அகிலேஷ் யாதவ் பதில் ட்வீட்

அகிலேஷ் யாதவ் | கோப்புப் படம்.
அகிலேஷ் யாதவ் | கோப்புப் படம்.
Updated on
1 min read

பணமதிப்பு நீக்கத்திற்கு பின்புதான் ஊழல் அதிகரித்தது, கறுப்புப் பணம் குறையவில்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனை நேற்று நினைவுகூர்ந்த பிரதமர் பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு கறுப்புப் பணப் புழக்கம் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் பணமதிப்பு நீக்கத்தின் பலன்களை பட்டியலிட்ட பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் எவ்வாறு சிறந்த வரி இணக்கம், மேம்பட்ட வரி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தை உறுதிசெய்தது, இந்தியாவை குறைந்த பண அடிப்படையிலான பொருளாதாரமாக மாற்றியது மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஒரு ஊக்கத்தை அளித்தது போன்ற பலநன்மைகள் கிடைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலடியாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு நாட்டின் பொருளாதாரத்தையே அழித்துவிட்டது என்று சாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமருக்கு பதிலளிக்கும்விதமாக தனது ட்விட்டர் பதிவில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

"நான்கு ஆண்டுகளாக பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகும், போலி பணத்தாள்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. பணமதிப்பு நீக்கத்திற்கு பின்புதான் ஊழல் அதிகரித்துள்ளது. கறுப்புப் பணம் குறையவில்லை. கறுப்புப் பணத்திற்கு எந்தவித கணக்கீடும் இல்லை. மக்கள் தங்கள் கணக்குகளில்15 லட்சம் பெறவில்லை"

இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in