Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

லடாக் எல்லையில் முன்களத்தில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்: இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஒப்புதல்

புதுடெல்லி

லடாக் எல்லையில் முன்களத்தில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அடிக்கடி அத்துமீற முயற்சி செய்ததால் கடந்த மே மாதம் முதல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது.

கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் வரை உயிரிழந்ததை அமெரிக்கா, இந்திய உளவுத் துறைகள் உறுதி செய்தன.

லடாக் எல்லையில் சீன தரப்பில் சுமார் 60,000 வீரர்களும்ஆயுதங்களும் குவிக்கப்பட் டுள்ளன. இதற்கு இணையாக இந்திய வீரர்களும் எதற்கும் தயார் நிலையில் உள்ளனர். அதிநவீன ஆயுதங்களும் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கடும் குளிர் காலம் தொடங்கியபோதும் எல்லையில் படைகள் குறைக்கப் படவில்லை.

கடந்த செப்டம்பரில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடை பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சந்தித்துப் பேசினர். அப்போது லடாக் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங் கப்பட்டது. கடந்த செப்டம்பர், அக்டோபரில் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக கடந்த 6-ம் தேதி இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள், லடாக்கில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சந்தித்து 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், "லடாக் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய, சீன வீரர்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்" என்று இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்திய, சீன ராணுவ உயர திகாரிகளின் பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய அரசு சார்பில்நேற்று அறிக்கை வெளியிடப்பட் டது. அதில் கூறியிருப்பதாவது:

எட்டாவது சுற்று பேச்சுவார்த் தையில் எல்லையில் படைகளை குறைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இரு நாடு களின் தலைவர்கள் ஏற்கெனவே செய்து கொண்ட உடன்பாடுகளை அமல்படுத்த ஒப்புக் கொள்ளப் பட்டது. குறிப்பாக லடாக் எல்லையில் முன்களத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இருநாடுகளின் வீரர்களும் கட்டுப்பாட்டை கடைப் பிடிக்க வேண்டும். தவறான புரிதல்,தவறான கணக்கீடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றுஇருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

ராணுவ, ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் அமைதியைப் பேண வேண்டும். விரைவில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ, ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x