

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள மண்டல பூஜை விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. கோயிலில் துலாம் மாத பூஜையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மலையாள மாதமான துலாம் மாத (தமிழில் ஐப்பசி) பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் காலையில் ரிக்வேத லட்சார்ச்சனை நடைபெறுகிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தலைமையில், சகஸ்ர கலசாபிஷேகம், களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படி பூஜை ஆகியவற்றை மேல்சாந்தி இ.என்.கிருஷ்ணன் நம்பூதிரி நடத்தி வருகிறார். இவை நாளை வரை தொடர்ந்து நடைபெறுகிறது. நாளை மாலை அத்தாளபூஜைக்குப் பின் கோயில் நடை அடைக்கப் படுகிறது.
கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் 4 மணி நேரத்துக்குக்கு மேல் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நவம்பர் 17-ம் தேதி தொடங்கும் மண்டல பூஜை காலத்தில் சுவாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதனைத் தொடங்கி வைத்து, கேரள மாநில போலீஸ் டிஜிபி டி.பி.சென்குமார் கூறும்போது, `பொதுமக்கள் sabarimala.com என்ற இணைய முகவரியில், தங்கள் பெயர், வயது, முகவரி, போட்டோ மற்றும் அடையாள அட்டை, தாங்கள் கோயிலுக்கு வரவிருக்கும் தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
பதிவுக்குப் பின் வரும் கூப்பனை பிரின்ட் எடுத்துக் கொண்டு, தரிசனத்துக்கு வரும்போது அந்த கூப்பனையும், தங்கள் அடையாள அட்டையையும் எடுத்து வந்து, எளிதாக தரிசனம் செய்யலாம்’ என்றார்.