

பண மதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டதால் நாட்டில் கருப்புப் பணப் புழக்கம் குறைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை 4 ஆண்டுகள் செயல்படுத்தப்பட்ட நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், பணப் புழக்கம் ஒரு நிலைக்கு வந்துள்ளது என்றும் இதன் மூலம் வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். இது குறித்து மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தேசம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியதுதான் கிடைத்த பலன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவிக்கையில், ‘‘வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு வழியேற்படுத்தி உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் லஞ்சம் இல்லாத சூழலை உருவாக்குவதன் ஒரு நடவடிக்கையாக பண மதிப்பு நீக்க நடவடிக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (நவம்பர் 8, 2016) கொண்டு வரப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு இதற்கு முன்பு எடுத்திராத வகையிலான அதிரடி நடவடிக்கை இதுவாகும் என்று குறிப்பிட்டார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை செயல்படுத்தப்பட்ட நான்கு மாதங்களில் கணக்கில் காட்டப்படாத ரூ.900 கோடி மதிப்பிலான வருமானம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் கணக்கில் காட்டப்படாத சொத்துகளாக ரூ.3,950 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கணக்கில் காட்டப்படாத சொத்துகள் பல பறிமுதல் செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை சீரானதாக்க உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ராகுல் குற்றச்சாட்டு
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நடவடிக்கையானது ஆளும் கட்சியின் முதலாளி நண்பர்களுக்காக கொண்டு வரப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். 2016-ல் கொண்டு வரப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் சீரழித்துவிட்டது என்ற அவரது குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக கருத்துகளை தெரிவியுங்கள் என கூறப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை விட வங்கதேச பொருளாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்றும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு உலகின் மிகச் சிறந்த பொருளாதார நாடாக இந்தியா விளங்கியதையும் அந்த வீடியோ காட்சிகள் சித்தரிக்கின்றன.
பொருளாதாரம் சரிந்ததற்கு அரசு கரோனோவைக் காரணமாக கூறுகிறது. வங்கதேசத்தில் கரோனா பரவல் இல்லையா, அந்த நாடு மட்டும் இந்தியப் பொருளாதாரத்தை விட சிறப்பாக முன்னேறியது எப்படி என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கருப்புப் பணத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என பிரதமர் கூறுகிறார். ஆனால் அத்தகைய பலன் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களிடம் இருந்து பணத்தை எடுத்து தனது பணக்கார நண்பர்கள் பலனடைய வழியேற்படுத்தி விட்டார். பணக்காரர்களுக்கு 3,50,000 கோடி ரூபாய் கடன் தொகையை ரத்து செய்துவிட்டார் என்று ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.