

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சூழலில், பல பிரபல செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் சார்பில் தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியாயின. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், எதிர்க்கட்சியான ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்ஜேடி தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைமை நேற்று ஓர் அவசர உத்தரவை பிறப்பித்தது. அதில், “தேர்தல் முடிவுகள் எதுவாக இருப்பினும் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து, கொண்டாட்டம் என்ற பெயரில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடுவது, மற்ற கட்சியினரிடம் தகாத முறையில் நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது” என கூறப்பட்டுள்ளது.
பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக மற்றும் சிறிய கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டன. ஆர்ஜேடி கட்சி தலைமையில் காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகள் மெகா கூட்டணி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.