பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 1,100 வேட்பாளர்களுக்கும் அதிகமானோர் மீது குற்ற வழக்குகள்: தேர்தல் ஆணையம் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 1,100 வேட்பாளர்களுக்கும் அதிகமானோர் குற்றப் பின்னணியுடன் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. முதல் கட்டம் கடந்த மாதம் 28ஆம் தேதியும், 2ஆம் கட்டம் கடந்த 3ஆம் தேதியும், 7ஆம் தேதி 3ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடந்தது. வரும் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்தத் தேர்தலில் பிஹாரில் மொத்தம் 371 பெண் வேட்பாளர்கள் உள்பட 3,733 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் 1,157 வேட்பாளர்கள் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் ஏன் தேர்வு செய்கின்றன என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியிருந்தது. அதுமட்டுமல்லாமல் அனைத்து வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகள் குறித்து நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தது முதல், தேர்தல் வாக்குப்பதிவு வரை 3 முறை தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து விளம்பரம் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய உத்தரவின்படி, வேட்புமனு பரிசீலனைத் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பாக ஏதாவது ஒரு நாளில் முதல் முறையாக விளம்பரத்தை வேட்பாளர்கள் வெளியிட வேண்டும்.

அதன்பின் வேட்புமனுவை வாபஸ் பெறும் நாளுக்கு 5, 8ஆம் நாட்களுக்கு இடையே, இரண்டாவது முறையாக வேட்பாளர் தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு தொடங்கும் தேதிக்கு இரு நாட்களுக்கு முன் வேட்பாளர் தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து மூன்றாவது முறையாக விளம்பரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்துக் குறிப்பிட்ட இடைவெளியில் விளம்பரம் செய்யும்போது மக்களின் கவனம் ஈர்க்கப்படும். மக்கள் தங்கள் வாக்குகளைத் தேர்வு செய்து அளிக்க வழி ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இத்தனை விதிமுறைகள், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்த நிலையிலும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in