

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை ராணுவத்தினர் முறியடித்துள்ளனர். இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வடக்கு காஷ்மீரைச் சேர்ந்த மச்சில் செக்டரில் இச்சம்பவம் நடைபெற்றது.
இதுகுறித்து பாதுகாப்புச் செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலியா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
''காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் வழியாக நுழைய முயன்ற தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் மச்சில் செக்டரில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை ராணுவம் தடுத்து நிறுத்தியதுடன் அவர்களுடன் தொடர்புடைய தீவிரவாதக் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வடக்கு காஷ்மீரைச் சேர்ந்த குப்வாரா மாவட்டத்தில் மச்சில் செக்டரின் எல்லைப் பகுதிகளில் நேற்று இரவு ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் வேலி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இருப்பதைக் கண்டனர்.
அதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இச்சண்டையின்போது தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அந்த இடத்திலிருந்து ஒரு ஏ.கே.ரகத் துப்பாக்கி மற்றும் இரண்டு பைகள் மீட்கப்பட்டன. அவர்களுடன் தொடர்புடைய தீவிரவாதக் குழுக்களும் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதியைச் சுற்றிலும் மேலும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது''.
இவ்வாறு பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.