Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

இந்தியா நடத்தும் மலபார் போர்ப் பயிற்சியில் விக்கிரமாதித்யா கப்பலுடன் இணையும் அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க் கப்பல்

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க் கப்பல் நிமிட்ஸ்.

புதுடெல்லி

இந்தியாவுடன் கூட்டுப் போர்ப் பயிற்சியில் அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க் கப்பல் ‘நிமிட்ஸ்’ இணையவுள்ளது.

இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், அமைதியை பராமரித்து,சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் இணைந்து, ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த நாடுகள் இணைந்து, மலபார் கூட்டு போர்ப் பயிற்சி மேற்கொள்கின்றன.

முதல் கட்டமாக மலபார் கூட்டு போர்ப் பயிற்சி நவம்பர் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க் கப்பல் நிமிட்ஸ், இந்தியகடற்படையுடன் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடவுள்
ளது. இந்தப் பயிற்சி கோவா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது. இந்திய கடற்படையில் உள்ள விக்கிரமாதித்யா போர்க் கப்பலுடன் இணைந்து நிமிட்ஸ் கூட்டு பயிற்சியில் ஈடுபடும். மேலும் இதனுடன் மிக்-29கே ரக போர் விமானங்கள், எப்-18 ரக
விமானங்களும் இணையும் எனத்தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க் கப்பலாக விளங்கும் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (சிவிஎன்68) என்ற போர்க் கப்பல் உலகிலேயே மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பலாக விளங்குகிறது. தற்போது இந்திய கடற்பகுதிக்கு நிமிட்ஸ் வரவுள்ளது.

நவம்பர் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இந்த கூட்டுபோர்ப் பயிற்சியில் விக்கிரமாதித்யா, நிமிட்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பானின் போர்க் கப்பல்கள் இணைந்து பயிற்சியில் ஈடுபடஉள்ளன. இந்த 4 நாள் பயிற்சியில் சுமார் 70 போர்க் கப்பல்கள் பங்கேற்கவுள்ளன என்று இந்திய கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய தரப்பில், போர்க் கப்பல்கள் ரன்விஜய், சிவாலிக்,சுகன்யா, சக்தி மற்றும் நீர்மூழ்கி கப்பல் சிந்துராஜ், மேம்படுத்தப்பட்ட பயிற்சி கப்பல் ஹாக், நீண்ட தொலைவு கடல்ரோந்து விமானம் பி-81, டோர்னியர் கடல் ரோந்து விமானம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க தரப்பில் யுஎஸ்எஸ் ஜான் எஸ்.மெக்கைன் போர் கப்பல், ஆஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். பல்லாரத் போர் கப்பல், எம்.எச்.-60ஹெலிகாப்டர், ஜப்பான் தரப்பில் ஜே.எஸ்.ஒனாமி டெஸ்டிராயர் கப்பல் போன்றவை பயிற்சியில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x