

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவில் 4,605 மாணவர்கள் காந்தி வேடமணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் கடந்த 2009-ம் ஆண்டு தமிழக மாணவர்கள் நிகழ்த்திய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் 147-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கில் நேற்று பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காந்தியின் போதனைகளை விளக்கும் நாடகம், நடனம், பாடல் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து காந்தியின் பேத்தி சுமித்ரா காந்தி, முக்கிய அணிவகுப்பு கலை நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 4605 மாணவர்கள் காந்தி வேடமணிந்து அணிவகுத்து நின்றனர். பின்னர் அனைவரும் காந்திக்கு பிடித்தமான பஜனைகளை பாடினர். மேலும் அவர்கள் மென்மையான இசைக்கு நடனமாடியது கண்கொள்ளா கட்சியாக இருந்தது.
பெங்களூருவில் 4605 மாணவர்கள் காந்தி வேடமணிந்து நிகழ்த்திய இந்த கலை நிகழ்ச்சியின் மூலம், கடந்த 2009-ல் தமிழகத்தில் 3 பள்ளிகளை சேர்ந்த 2955 மாணவர்கள் நிகழ்த்திய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.