Published : 07 Nov 2020 08:06 PM
Last Updated : 07 Nov 2020 08:06 PM

மாறிவரும் சூழலுக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புதுடெல்லி

நாட்டின் தேவைகளை அறிந்து, மாறிவரும் சூழலுக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் பெறும் மாணவர்கள், நாட்டின் தேவையை அறிந்து, மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு சாமானிய மக்களின் விருப்பங்களை அவர்கள் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் 51-வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

விழாவில் பட்டம் பெற்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், தற்சார்பு இந்தியா என்ற திட்டம் இளைஞர்கள், தொழில்நுட்பவாதிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார். தொழில்நுட்பவாதிகள், தங்களது திட்டங்களை நிறைவேற்றவும், புதிய கண்டுபிடிப்புகளைத் தயாரித்து சுதந்திரமாக அவற்றை சந்தைப்படுத்துவும் ஆதரவான சூழல் தற்போது நிலவி வருகிறது என்று அவர் கூறினார்.

இளைஞர்கள் எளிய முறையில் வர்த்தகம் செய்ய இந்தியா உறுதுணையாக இருக்கும், இதன் மூலம் எதிர்காலத்தில் கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை இளைஞர்கள் உருவாக்குவார்கள் என்று அவர் தெரிவித்தார். "நாடு உங்களுக்கு எளிய வர்த்தகத்தை ஏற்படுத்தி தரும், நீங்கள் இந்நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாக்க செயல்படுங்கள்", என்றுமோடி கூறினார். கடந்த காலங்களில் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் மிகப்பெரிய சீர்தீருத்தங்களின் பின்னால் இந்த எண்ண ஓட்டமே மேலோங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

முதன்முறையாக இதுபோன்ற சீர்திருத்தங்களால் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புது நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட்-அப்) வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளை அவர் பட்டியலிட்டார்.

இதர சேவை வழங்கும் தொழில்களுக்கு வழங்கப்பட்டிருந்த வழிமுறைகள் எளிதாக்கப்பட்டு, அவற்றின் மீது இருந்த தடைகளும் அண்மையில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பிபிஓ உள்ளிட்ட தொழில்களின் சுமைகள் குறைக்கப்படும் என்று அவர் கூறினார். வங்கி உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளிலிருந்து பிபிஓ துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். மேலும் தொழில்நுட்பத் துறையில் வீடுகளிலிருந்து அல்லது வேறு இடங்களிலிருந்து பணி செய்வதில் இருந்த இடர்பாடுகளும் களையப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். இதன் மூலம் நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை, உலகச் சந்தையில் போட்டியிடவும், இளம் திறமையாளர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கவும் ஏதுவாக இருக்கும் என்று அவர் கூறினார்.

உலக அளவில் மிகக்குறைந்த வர்த்தக வரியைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று பிரதமர் தெரிவித்தார். ஸ்டார்ட் அப் இந்தியா பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் மொத்த காப்புரிமைகள் நான்கு மடங்காக உயர்ந்திருப்பதாகவும், இதேபோல் கடந்த ஐந்து வருடங்களில் நாட்டின் மொத்த வணிக உரிமைக்குறிகள் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் 20-க்கும் மேற்பட்ட யூனிகார்ன் என்று அழைக்கக்கூடிய சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

தற்போது தொடக்க நிலையிலிருந்து நிதி அளிப்பது வரை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் ரூபாய் பத்தாயிரம் கோடி முதலீட்டில் நிதியம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர். மேலும் மூன்று வருடங்கள் வரை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரியிலிருந்து விலக்கு, சுய சான்றிதழ் மற்றும் எளிய விலகல் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

தேசிய உள்கட்டமைப்பு குழாய் இணைப்பின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன உள்கட்டமைப்பு வசதிகள் நாட்டில் உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு துறையிலும் அதிகபட்ச திறனை அடையும் லட்சியத்தோடு இன்று நாடு செயல்பட்டுக் கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் தங்கள் பணி இடங்களில் கடைபிடிக்க வேண்டியதாக 4 தாரக மந்திரங்களை பிரதமர் தெரிவித்தார்:

1. தரத்தின் மீது திடமாக இருத்தல்; தரத்தில் தளர்வு ஏற்படக் கூடாது

2. அளவிடுதலை உறுதி செய்தல்; உங்களது படைப்புகள் பெரும்பான்மையோரால் பயன்படுத்தும்படி செயல்படுங்கள்

3. நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல்; சந்தையில் நீண்டகால நம்பிக்கையை உருவாக்குங்கள்

4. எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுதல்; மாற்றத்திற்கும், எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்றுக்கொள்தற்கும் தயாராக இருங்கள்

இந்த நான்கு மந்திரங்களை கடைப்பிடிப்பதன் மூலம், தனிநபர் மற்றும் இந்தியாவின் அடையாளம் பிரகாசம் அடையும், ஏனென்றால் மாணவர்கள்தான் இந்தியாவின் சிறந்த தூதுவர்கள் என்று பிரதமர் கூறினார். மாணவர்களின் கண்டுபிடிப்புகளின் வாயிலாக இந்திய பொருட்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதுடன் நாட்டின் செயல்பாடுகளும் வளர்ச்சி அடையும் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

கோவிட் பரவலுக்கு பிந்தைய காலம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் இந்த உலகத்தில் தொழில்நுட்பம் மிகப் பெரும் பங்கு வகிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மெய்நிகர் மெய்ம்மை என்பதை இதுவரை நாம் சிந்தித்தது இல்லை, எனினும் தற்போது மெய்நிகர் மெய்ம்மையும், மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மையும் செயல்முறை மெய்ம்மையாக ஆகிவிட்டன என்று அவர் கூறினார். பட்டம் பெற்று வெளியில் செல்லும் முதல் பிரிவு மாணவர்கள், பணியிடங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகளின் அனுபவத்தை பெறுவார்கள் என்றும், இதனை அவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கோவிட்-19, உலகமயமாக்கலின் முக்கியத்துவத்தையும், அதேசமயம் தன்னிறைவு அடைவதும் அதே அளவு முக்கியம் என்பதையும் கற்றுத் தந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆட்சிமுறை அடித்தட்டு மக்களையும் எப்படி எளிதாக சென்றடைவது என்பதை தொழில்நுட்பங்கள் கற்றுத்தந்து இருப்பதாக பிரதமர் கூறினார். கழிவறை கட்டுதல், எரிவாயு இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களை ஏழை எளியோருக்கு கொண்டு சேர்ப்பதில் தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவிகரமாக இருந்து இருப்பதாக அவர் கூறினார். டிஜிட்டல் சேவைகளின் மூலம் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் சுலபமாக்கப்படுவதற்கு அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். நாட்டின் இறுதி மைல் வரை சேவைகள் வழங்கவும் ஊழலை கட்டுப்படுத்துவதற்கும் தொழில்நுட்பம் ஏதுவாக உள்ளது என்றார் அவர். டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளிலும் உலக அளவில் இந்தியா முன்னோடியாகத் திகழ்வதாகவும் வளர்ந்த நாடுகளும் இந்தியாவின் யுபிஐ போன்ற தளங்களை செயல்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் தொடங்கப்பட்ட ஸ்வாமித்வா திட்டத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு அபரிமிதமானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் முதன்முறையாக வீடுகளும் நில சொத்துகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.‌ முன்னதாக இந்தப் பணியை ஊழியர்கள் செய்தபோது ஏராளமான சந்தேகங்களுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் இன்று ட்ரோன் என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தப் பணி நடத்தப்படுவதால் கிராமத்து மக்களும் திருப்தி அடைந்துள்ளனர். மேலும் சாமானிய மக்களுக்கு தொழில்நுட்பத்தின் மீது இருக்கும் நம்பிக்கை வெளிப்படுகிறது என்று அவர் கூறினார். பேரிடர் மேலாண்மை, நிலத்தடி நீரின் அளவை பாதுகாத்தல், தொலை மருத்துவ சேவை, ரிமோட் அறுவை சிகிச்சை, பெரிய தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட சவாலான துறைகளை பட்டியலிட்ட பிரதமர், தொழில்நுட்பத்தின் மூலம் இவற்றிற்கு தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இளம் வயதில் கடினமான தேர்வுகளில் வென்று, தங்களது திறமையை நிரூபித்துள்ள மாணவர்களைப் பாராட்டிய பிரதமர், அதே சமயம் அவர்கள் எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மையுடனும், பணிவுடனும் இருந்து தங்களது திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மை என்பது எந்தத் தருணத்திலும் ஒருவரது அடையாளத்தை விட்டுக் கொடுக்காத வகையில் அதேசமயம் குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். பணிவுடைமை என்பதன் வாயிலாக ஒருவரது வெற்றி மற்றும் சாதனையைக் கண்டு பெருமை கொண்டு, அதேவேளையில் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

பட்டங்கள் பெற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பவள விழா கொண்டாட்டங்களில் ஈடுபடும் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், டெல்லியை வாழ்த்திய அவர், இந்த உயர்கல்வி நிறுவனத்தின் லட்சியங்கள் நிறைவடைந்து வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x