

பிஹார் சட்டப்பேரவைக்கு நடந்த 3-ம் கட்டத் தேர்தலில் 51.4 சதவீத வாக்குகள் பதிவானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 71 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 94 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 78 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 3-ம் கட்டத் தேர்தலில் 54.1 சதவீத வாக்குகள் பதிவானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதிக்கட்டத் தேர்தலில் மொத்தம் 1,204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 110 பேர் பெண்கள். ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவின் மகள் சுஹாசினி (பிஹாரிகஞ்ச் தொகுதி) காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
மண்டல் கமிஷன் தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.பி.மண்டலின் பேரன் நிகில் மண்டல் (மாதேப்புரா தொகுதி) ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார். முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் நரேந்திர நாராயண் யாதவ், பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
பிஹார் தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்த நிலையில் இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.