

அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்வாக உள்ள 'இந்தியாவின் மகள்' கமலா ஹாரிஸை வரவேற்க இந்திய அரசாங்கம் தயாராக வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நிறைவடைய உள்ளது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிக்கனியைப் பறித்துள்ளார். அதே கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது தாய் சியாமளா கோபாலன் இந்தியாவைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சியாமளா கோபாலன் அமெரிக்காவில் ஒரு முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சியாளராகத் திகழ்பவர்.
கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவில் ஒரு பெரிய அரசியல் பதவியை வகிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராக இருப்பார்.
இந்நிலையில், கமலா ஹாரிஸை இந்தியா பிரம்மாண்டமாக வரவேற்க வேண்டுமென மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
"#Bharat_ki_beti (இந்தியாவின் மகள்) கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராகவும், எதிர்காலத்தில் அந்த மாபெரும் நாட்டின் அதிபராகவும் பணியாற்றி உலகின் மிகப் பழமையான ஜனநாயகத்தை வழிநடத்த வேண்டும்.
இந்திய அரசு கமலா ஹாரிஸைக் கவுரவிக்கும் வகையில் ஓர் அன்பான, பிரம்மாண்டமான மற்றும் உணர்ச்சிமயமான வரவேற்பைச் செய்ய வேண்டும்.
இந்தியராக இருப்பதால் நாம் அனைவரும் அவரைப் பற்றிப் பெருமைப்படுகிறோம். கமலா ஹாரிஸுக்கு வணக்கம். ”
இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.