Last Updated : 07 Nov, 2020 04:00 PM

 

Published : 07 Nov 2020 04:00 PM
Last Updated : 07 Nov 2020 04:00 PM

9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட்

சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்த பிஎஸ்எல்வி- சி49 ராக்கெட் : படம் உதவி |ட்விட்டர்

ஸ்ரீஹரிகோட்டா

இஓஎஸ்-1 உள்பட 9 செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி- சி49 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இஸ்ரோ சார்பில் பிஎஸ்எலவி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை 7-ம் தேதி விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான 26 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று நண்பகல் 1.02 மணிக்குத் தொடங்கியது. இந்த ராக்கெட்டுடன் சேர்ந்து வணிக ரீதியாக 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டது. ஒரு செயற்கைக்கோள் லிதுவேனியாவைச் சேர்ந்தது; 4 செயற்கைக்கோள் லக்சம்பர்க்கைச் சேர்ந்தவை; மற்றவை அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.

இஓஎஸ்-1 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளைத் துல்லியமாக மேற்கொள்ளும்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை மக்கள் காணும் வகையில், ட்விட்டரில் நேரலை செய்ய இஸ்ரோ ஏற்பாடு செய்தது.

இதன்படி இன்று பிற்பகல் 3.02 மணிக்கு திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட வேண்டும். ஆனால், விண்ணில் செலுத்துகையில் சில இடையூறுகள் இருந்ததால், 10 நிமிடங்கள் தாமதமாக 3.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட்டிலிருந்து இஓஎஸ்-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பிரிந்து புவிநீள்வட்டப் பாதையில் நிறுத்தப்பட்டது. அதேபோல, மற்ற வணிகரீதியான 9 செயற்கைக்கோள்களும் பிரிந்து புவி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டன.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு திட்டமிட்டபடி எந்தவிதமான செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. பிஎஸ்எல்வி ராக்கெட் வகையில் இது 51-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x