கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு கரோனா பாதிப்பு

கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் : கோப்புப்படம்
கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் : கோப்புப்படம்
Updated on
1 min read

கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நலத்தில் எந்தவிதமான பின்னடைவும் இல்லை என்றும், நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியில், “ எனக்குக் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆனால், என் உடல்நலம் கவலைப்படும் வகையில் இல்லை. எவ்வாறாகினும், என்னுடன் கடந்த வாரத்தில் டெல்லியில் தொடர்பில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 30-ம் தேதியிலிருந்து ஆளுநர் ஆரிஃப் முகமது டெல்லியில் தங்கியிருந்தார். தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை திருவனந்தபுரத்துக்கு ஆளுநர் முகமது கான் வந்தார். ஆளுநர் மாளிக்கைக்குச் சென்றதிலிருந்து முகமது கானுக்கு உடல்நலத்தில் லேசான பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்குக் கரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்து ஆளுநருக்குச் சிகிச்சையளித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், ஆளுநர் மாளிகையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஆளுநர் முகமது கான் இருந்து வருகிறார்.

கேரள மாநிலத்தில் தொடக்கத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பின் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் புதிதாக 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் உயிரிழந்தனர்.

திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம், கொல்லம், ஆழப்புழா, திருவனந்தபுரம், பாலக்காடு, கோட்டயம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் 400க்கும் குறைவில்லாமல் நேற்று புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டனர். பத்தனம்திட்டா, வயநாடு, இடுக்கி, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 150-க்கும் குறைவானவர்களே புதிதாகப் பாதிக்கப்பட்டனர்.

கேரளாவில் கரோனாவில் இருந்து இதுவரை 3,88,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 83,208 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,640 ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in