

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை பண்பை தலைப்பாக எடுத்து இளைஞர் ஒருவர் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்து வருகிறார்.
மேற்குவங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஹடிடோடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல் இஸ்லாம் முல்லா (25). இவர் மேற்கு மித்னாபூர் மாவட்டத்தில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விண்ணப்பித்தார். `முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை பண்பு’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதாக விருப்பம் தெரிவித்தார்.
முல்லாவின் விருப்பத்துக்கு பல்கலைக்கழகமும் பல்கலைக் கழக மானிய குழுவும் அனுமதி அளித்துள்ளது. நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் பெற்ற முல்லா கூறியதாவது:
சிறுவயதில் இருந்தே மம்தா பானர்ஜியின் செயல்பாடுகள் எனக்கு பிடித்திருந்தன. அவ ருடைய நிர்வாக திறமை மிகவும் கவர்ந்தது. அவருக்கு நிகராக யாரையும் கூற முடியாது. ஏழை கள், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக மம்தா போராடி வருவதை சிறுவயதில் இருந்தே அறிவேன். அரசியல் குண்டர்கள் எங்கள் கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது எனது பெற்றோரையும் கிராம மக்களையும் மம்தா பானர்ஜிதான் காப்பாற்றினார்.
மம்தாவின் நிர்வாக திறன் அலாதியானது. இடதுசாரி அரசு மேற்குவங்கத்தில் நிலம் கையகப் படுத்தும் திட்டத்தை அமல்படுத் தியபோது மம்தாவின் போராட்டம் தீவிரமானது. நிர்வாகவியலில் அவர் முறைப்படி எந்த பட்டமும் பெறாவிட்டாலும், அவருக்குள்ள தகுதிகள் அதிகம்.
சிங்குர் மற்றும் நந்திகிராம் பகுதியில் நிலம் கையகப்படுத்து வதை எதிர்த்து மக்கள் இயக்க மாக அவர் நடத்திய போராட்டங் களே அவருடைய நிர்வாக திற மைக்கு சான்றாக உள்ளன. முதல்வர் பதவியேற்ற பிறகு பல் வேறு பிரச்சினைகளை அவர் கையாண்ட விதம் மிகவும் சிறப் பானது. இதுபோன்ற விஷயங் களை நிர்வாகவியல் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். இவ்வாறு முல்லா கூறினார்.
இதுகுறித்து வித்யாசாகர் பல்கலைக்கழக துணை வேந்தர் ரஞ்சன் சக்கரவர்த்தி நேற்று கூறுகையில், “தற்கால அரசியல் தலைவர் ஒருவரை பற்றி முனை வர் பட்டத்துக்கு முல்லா ஆய்வு செய்வது வரவேற்கத்தக்கது. அவருடைய ஆய்வு முடிவுகளை அறிய நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்’’ என்றார்.
1984-ம் ஆண்டு மக்களவை எம்.பி.யாக மம்தா தேர்ந்தெடுக் கப்பட்டார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அமெரிக்காவின் கிழக்கு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் தான் முனைவர் பட்டம் பெற்றுள்ளதாக மம்தா கூறினார். ஆனால், அப்படி ஒரு பல்கலைக்கழகமே இல்லை என்று பின்னர் பெரும் சர்ச்சையானது.