

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பிஹாரின் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 71 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 94 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 78 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்குள்ளாக 7.7 சதவீத வாக்குகள் பதிவானதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இறுதிக்கட்டத் தேர்தலில் மொத்தம் 1,204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 110 பேர் பெண்கள். ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவின் மகள் சுஹாசினி (பிஹாரிகஞ்ச் தொகுதி) காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
மண்டல் கமிஷன் தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.பி.மண்டலின் பேரன் நிகில் மண்டல் (மாதேப்புரா தொகுதி) ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார். முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் நரேந்திர நாராயண் யாதவ், பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
"பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கடைசிக் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மக்கள் அனைவரும் பிஹார் வளர்ச்சிக்காக வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
கோவிட்-19 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்து, ஜனநாயகத்தின் மகத்தான திருவிழாவில் பங்கேற்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.”
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவிததுள்ளார்.