காஷ்மீரில் போர் நிறுத்தத்தை மீறி பாக். மீண்டும் ஷெல் தாக்குதல்: பதுங்குக் குழிகளில் பீதியுடன் இரவைக் கழித்த பொதுமக்கள்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

காஷ்மீரில் சர்வதேச எல்லையோரக் கிராமங்களில் பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டு, ஷெல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் எல்லையோரக் கிராமங்களில் வசிக்கும் பொதுமககள் பதுங்குக் குழியில் பீதியுடன் இரவைக் கழித்தனர்.

நேற்றிரவு, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மற்றும் கத்துவா மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) மற்றும் சர்வதேச எல்லை (IB) வழியாகத் தொடர்ந்து பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை நோக்கி பாகிஸ்தான் துருப்புகள் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் மான்கோட் செக்டரில் அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலைத் தொடங்கியது.

அதன்பின்னர் தொடர்ந்து நடைபெற்ற இரு தரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல் அதிகாலை 4 மணியளவில் நிறுத்தப்பட்டது.

அதே நேரத்தில் ஹிரானகர் செக்டரில் சர்வதேச எல்லையில், சிறிய ஆயுதங்களுடன் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு இரவு முழுவதும் தொடர்ந்தது. இதில் இந்தியத் தரப்பில் எந்தவிதமான சேதமும் ஏற்பட்டவில்லை.

கரோல் கிருஷ்ணா, சத்பால் மற்றும் குர்ணம் ஆகிய இடங்களில் எல்லைப்புறக் காவல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர், துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து இந்தியத் தரப்பில் எல்லைக் காவலில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) பணியாளர்கள் கடும் பதிலடி கொடுத்தனர்.

இப்பகுதிகளில் அதிகாலை 5.10 மணி வரை இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூடு எல்லைப்புற மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. அவர்கள் நிலத்தடிப் பதுங்குக் குழிகளில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது''.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in