Last Updated : 16 Oct, 2015 08:14 AM

 

Published : 16 Oct 2015 08:14 AM
Last Updated : 16 Oct 2015 08:14 AM

பருப்பு விலை உயர்வால் கர்நாடகத்தில் ஒரு வடை ரூ.25: விவசாயிகளுக்கு பலனில்லை; இடைத்தரகர்கள் மீது குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் பருப்பு விலை உயர்வால் உணவுப் பண்டங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு வடை அதிகபட்சமாக ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடகாவில் பருவ மழை பொய்த்ததால் துவரை, அவரை, உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய தானியங்களின் விளைச்சல் கடுமையாக பாதித்தது. இதனால் பருப்பு வகைகள் ஏற்றுமதி வெகுவாக குறைந்து, அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. பருப்பு வகைகளின் தட்டுபாடு காரணமாக துவரம் பருப்பு, உளுந்து, கடலை பருப்பு ஆகியவற்றின் விலை கடந்த 3 மாதங்களில் பல மடங்கு உயர்ந்து விட்டது.

இதனால் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவு விடுதிகளில் இட்லி, தோசை, வடை ஆகியவற்றின் விலை கணிசமாக‌ உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 இட்லி 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.10 உயர்த்தி ரூ.30-க்கு விற்கப்படுகிறது. இதே போல ரூ. 8 முதல் ரூ.10-க்கு விற்கப்பட்ட உளுந்து வடையின் விலை தற்போது ரூ.15 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ. 30 முதல் ரூ.40-க்கு விற்கப்பட்ட தோசையின் விலை தற்போது ரூ.50-க்கு விற்கப்படுகிறது.இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக விவசாய உற்பத்தி வர்த்தக குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த செப்டம்பர் மாதத்தில் நடுத்தர ரக துவரம் பருப்பு 1 குவின்டால் ரூ. 8,000-க்கு விற்கப்பட்டது. தற்போது அதே பருப்பு 12 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ள‌து.

ரூ. 12 ஆயிரத்துக்கு விற்கப் பட்ட உயர் ரக துவரம் பருப்பு தற்போது குவின்டால் ஒன்றுக்கு 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர், மார்ச்சில் இதே பருப்பு வகைகள் ரூ. 4,500 முதல் ரூ.6,000 வரை மட்டுமே விற்கப்பட்டன. அண்டை மாநிலங் களில் இறக்குமதி செய்தால் மட்டுமே அத்தியாவசிய பருப்பு களின் விலை குறையும்''என்றார்.

இது தொடர்பாக கர்நாடக மாநில‌ விவசாயிகள் சங்கத் தலைவர் மாதே கவுடா கூறும்போது, “பருவமழை பற்றாக்குறையின் காரணமாக துவரை, உளுந்து, அவரை உள்ளிட்ட அத்தியாவசிய தானியங்களின் உற்பத்தி 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும் பருப்பு வர்த்தகர்களும், இடைத்தரகர்களும் தங்களது கிடங்குகளில் பருப்பை பதுக்கி வைத்துக்கொண்டு விலையை உயர்த்தியுள்ளனர். எனவே உணவு மற்றும் பொது விநியோக துறை அதிகாரிகள் கிடங்குகளை சோதனையிட வேண்டும்.

கர்நாடக அரசு விவசாயிக‌ளிடம் இருந்து நேரடியாக விளைபொருட் களை கொள்முதல் செய்து, பொது விநியோக துறை மூலமாக விற்பனை செய்யாதவரை வர்த்தகர்களும், இடைத் தரகர்களும் மட்டுமே கொழிப்பார்கள்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x