

மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் இந்து கடவுள் படம் போட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என முஸ்லிம் கடைக்காரர்களுக்கு இந்துத்துவா அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பான அதிர்ச்சிகரவீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இத்தகைய பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கடைக்காரர்களை காவி துண்டு அணிந்த சிலர் மிரட்டுவதை அவற்றில் காண முடிகிறது. ஒரு வீடியோவில் “விநாயகர், லட்சுமி படம் கொண்ட பட்டாசுகளில் ஒரு பட்டாசு இங்கு விற்கப்பட்டாலும் கூட நீங்கள் விரும்பாத விஷயங்களை செய்ய நாங்கள் கட்டாயப்படுத்துவோம்” என்று முஸ்லிம் கடைக்காரர் ஒருவரை அவர்கள் மிரட்டுவது தெரிகிறது.
கடையின் உரிமையாளர் இதற்கு பயந்து, நீங்கள் சொன்னபடி செய்கிறேன் என பலமுறை உறுதி அளிப்பதும் தயவு செய்து கோப்பட வேண்டாம் என அவர் கெஞ்சுவதும் கேட்கிறது.
தேவாஸ் மாவட்டத்தில் கடந்த காலங்களில் இதுபோன்ற பட்டாசுகள் மக்களால் வாங்கப்பட்டு, தீபாவளி பண்டிகையின் போது உற்சாகமாக வெடிக்கப்பட்டுள்ளன. மேலும் கடைக்காரர் களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் இந்துத்துவா அமைப்பினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இது குறித்து விசாரிக்குமாறு போலீஸாருக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரமவுலி சுக்லா உத்தர விட்டுள்ளார்.