

மத்தியில் தன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டு முறை ஆட்சிக்குப் பின் 2014 முதல் காங்கிரஸ் சரிவை சந்தித்து வருகிறது. தனது நிலையை சட்டப்பேரவைத் தேர்தல்களின் மூலம் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் தூக்கிநிறுத்தவும் காங்கிரஸ் முயல்கிறது. இந்த வகையில், காங்கிரஸுக்கு பிஹாரில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலும் பெரும் சவாலாகி விட்டது.
இதன் 243 தொகுதிகளில் போட்டியிடும் மெகா கூட்டணியில் காங்கிரஸுக்கு 70 இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன. இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) வாக்காளர்களும் காங்கிரஸுக்கு உதவும் வாய்ப்புகள் உள்ளன. தனது பாரம்பரியவாக்காளர்களுடன், முஸ்லிம்களையும் காங்கிரஸ் நம்பியுள்ளது. இதனால், காங்கிரஸுக்கு கிடைக்கும் தொகுதிகளை வைத்து அதன் எதிர்காலம் பிஹாரில் நிர்ணயிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வேறு பல மாநிலங்களைப் போல் பிஹாரிலும் காங்கிரஸ் பல ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தது. இது 1985-ல் தன் கையைவிட்டு போன பின் காங்கிரஸ் தொடர்ந்து தனித்தும், கூட்டணி வைத்தும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் ஆதரவில் பிஹாரில் லாலு கட்சி 15 வருடங்கள் ஆட்சி செய்தது. இதன் பலனாக மக்களவையில் காங்கிரஸுக்கு எம்.பி.க்கள் கிடைத்தனர். 2019 மக்களவைத் தேர்தலில் பிஹாரில் கங்கிரஸால் ஒரு எம்.பி.யைக் கூட பெற இயலவில்லை.
லாலுவின் ஆர்ஜேடியுடன் கூட்டணி அமைத்து, 2005-ல் 84 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு ஐந்து சதவிகித வாக்குகளுடன் 10 இடங்கள் கிடைத்தன. 2010-ல் பிஹாரின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட காங்கிரஸுக்கு வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 2015-ம் ஆண்டு தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்ஜேடியுடன் இணைந்த காங்கிரஸின் மெகா கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் 41 இடங்களில் போட்டி யிட்ட காங்கிரஸுக்கு வெறும் 27தொகுதிகளில் வெற்றி கிடைத்தன. வாக்கு சதவிகிதம் சற்று சரிவடைந்து 6.09% கிடைத்தது.
இந்த முறை, காங்கிரஸுக்கு கிடைக்கும் தொகுதிகள் பிஹாரில் அதன் வளர்ச்சியைக் காட்டும் வாய்ப்புகள் உள்ளன. இதில் அக்கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி 8 பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். இவரது தாயும் கட்சித் தலைவருமான சோனியா காந்தி இந்த முறை பிரச்சாரம் செய்யவில்லை.
அதேபோல, புதிதாக தீவிர அரசியலில் களம் இறங்கிய பிரியங்கா வதேராவும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. எனவே,70 தொகுதிகளின் போட்டியில் கிடைக்கும் வெற்றி ராகுலுக்கானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் பிரதமராக முயலும் ராகுல் காந்திக்கு பிஹார்வாசிகள் அளிக்கும் முக்கியத்துவமும் இந்த தேர்தலில் தெரியும் வாய்ப்புகள் உள்ளன.